பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி வினோத நேர்த்திக்கடன் - கரூரில் கோயில் விழாவில் பரபரப்பு
கரூரில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீ புகாரி எனும் நெருப்புத் துகள்களை அள்ளி தலையில் கொட்டி வினோத நேர்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூரில் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலையில் , கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத வகையில் நிகழாண்டு வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் நிறுவு அருகே உள்ள வேடிச்சிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் தலையில் தீ புகாரி எனும் நெருப்புத் துகள்களை அள்ளி தலையில் கொட்டி வினோத நேர்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இதில் அக்னி சட்டி எடுத்தல், தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வழக்கம் போல நிகழாண்டு நடைபெற்று வரும் விழாவில் கோவில் வளாகம் முன்பு பெரிய குழி வெட்டப்பட்டு, நெருப்பு மூட்டி கங்கு மீது நடந்து சென்று தீ மிதித்து ஆண்கள் மட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்களுக்கு தீ மிதிக்க அனுமதி இல்லை. இதனால் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக சுற்றி நின்றிருந்தனர்.
கோயில் பூசாரி அங்கு நின்று இருந்த பெண்கள் தலையில் தீ கங்குகளை எடுத்து பூ வாரி தூவுவதை போல அவர்கள் தலையில் தீப்பொறிகளை கொட்டினார். இதனால் பெண்கள் அருள் வந்து ஆவேச நடனமாடினர். இந்த நிகழ்ச்சியால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அண்டை மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.