கரூர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா தேரோட்டம்
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழா சிறப்பாக கடந்த வாரம் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழா சிறப்பாக கடந்த வாரம் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் பங்குனி மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமியின் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சி முன்னிட்டு உற்சவர் முத்துமாரியம்மனுக்கு சிறப்புப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் தேரில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஆலயத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் தேர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் தேர் நிலைக்கு வந்தடைந்தது.
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திரு தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை முத்துமாரியம்மன் ஆலய ஊர் பொதுக்காரர் மற்றும் இளம் காளையர்கள் நற்பணி மன்றம் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக செய்தனர்.