(Source: ECI/ABP News/ABP Majha)
karthigai deepam 2023: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபம் இன்றுடன் நிறைவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அன்று காலை 4.45 மணிக்கு மேல் 6.13 மணிக்குள், அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 3ம் பிரகாரத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். பின்னர், துர்க்கையம்மன் உற்சவம் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து (15ம் தேதி) பிடாரி அம்மன் உற்சவமும், (16ம் தேதி), விநாயகர் உற்சவமும் அண்ணாமலையார் கோயிலில் இருந்து சாமி புறப்பட்டு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொடியேற்றம் பிறகு அன்று முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 23-ந் தேதி நடைபெறும் 7-வது நாள் தேரோட்ட உற்சவத்தில் காலை 7.30 மணிக்கு மேல் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக 5 தேர்கள் மாட வீதியில் வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமரிசையாக தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 26ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர கொண்ட சிவனே மலையக காட்சி தரும் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, மலை மீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆன்மிக வழக்கம். தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்காக, அருணாச்சலேஸ்வரர் கோயில் ஊழியர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் தினமும் மலைக்கு சென்று மகா தீபத்தை ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வந்தனர் . அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய் மற்றும் திரி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 9வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. மிக்ஜாம் புயல், தொடர்மழை மற்றும் பலத்த காற்றிலும் மலைமீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளிதாது . மேலும், மலையில் மகா தீபம் காட்சியளிக்கும் நாட்களில் கோயிலில் தரிசனம் செய்வதை பக்தர்கள் விரும்புகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அலைமோதுகிறது. இந்நிலையில், மலை மீது காட்சிதரும் மகா தீபம் இன்று (6ம் தேதி) இரவுடன் நிறைவு பெறுகிறது. நாளை மறுதினம் (7ம் தேதி) காலையில் தீப கொப்பரையை மலையில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, வரும் 27ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.