Kanchipuram Temple: கோடி புண்ணியம் எனும் நம்பிக்கை : அற்புத வரம் தரும் காஞ்சி புண்ணியகோடீசுவரர் கோயில்
Kanchipuram Punniya Kodeeswarar Temple: கோயிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடினால், இங்கிருக்கும் இறைவனை வழிபட்டால் புண்ணிய பல மடங்கு பெருகும் என நம்பப்படுகிறது.
காஞ்சிபுரம் என்றாலே கோயில் மற்றும் திருவிழா நகரம் தான். காஞ்சிபுரம் நகர் முழுவதுமே, புராதான மற்றும் பழமையான கோயில்கள் நிறைந்த நகரமாக உள்ளது. அந்த வகையில் தொடர்ந்து நாம் Travel With Abp தொடரின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து, பார்த்து வருகிறோம் ( Kanchipuram Temple City ).
காஞ்சிபுரம் புண்ணியகோட்டிஸ்வரர் கோயில் (Punniya Kodeeswarar Temple Kanchipuram )
காஞ்சிபுரத்தை பற்றி உயர்வாக கூறும், காஞ்சிபுரம் இடம் பெற்றுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாக, காஞ்சிபுரம் ஸ்ரீ தர்மவர்த்தினி சமேத புண்ணியகோடீசுவரர் கோயில் (புண்ணியகோடீசம்) கோயில் உள்ளது. விஷ்ணு காஞ்சிபுரம் என அழைக்கப்படும், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் உள்ளது. இந்த கோயில் சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழனால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலாக நம்பப்படுகிறது .
கோயிலில் வழிபாடு செய்தவர்கள்
இந்தக் கோயிலில் மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கக்கூடிய திருமால் தரிசனம் மேற்கொண்டுள்ளார். அதேபோன்று புராணங்களில் வரக்கூடிய கஜேந்திரன் எனும் யானையும் இக்கோயிலில் வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.
தல வரலாறு கூறுவது என்ன ?
இந்தக் கோயிலில் திருமால் வழிபட்டதாக நம்பப்படுகிறது. ஒரு முறை திருமாலுக்கு பணி செய்யும் கஜேந்திரன் எனும் யானை, முதலை பிடியில் சிக்கியது. அப்பொழுது மேக வடிவில் திருமால் இறைவனை வழிபட்டதால் முதலை பிடியிலிருந்து கஜேந்திரனை சிவபெருமான் காப்பாற்றினார். இதனைத் தொடர்ந்து கஜேந்திரன் யானையுடன் வருகை புரிந்த திருமால் கோயிலில் இறைவனை வழிபட்டார். அப்பொழுது திருமால் முன் தோன்றிய இறைவன் வேண்டிய வரங்களை அளித்தார் என்பது தல புராணமாக உள்ளது. வரங்கள் பெற்றதால் வரதராச பெருமாள் என்ற பெயரை திருமால் பெற்றார். யானையுடன் வந்ததால் அத்தகிரி என்ற பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
புண்ணியங்கள் பல கோடி பெருகும்
இந்த கோயிலில் உள்ள தீர்த்த குளத்தில் நீராடினால், இங்கிருக்கும் இறைவனை வழிபட்டால் புண்ணிய பல மடங்கு பெருகும் என நம்பப்படுகிறது. இதனாலே இக்கோயிலுக்கு புண்ணியகோடீசம் என பெயர் பெற்றது. அதேபோன்று இங்கு இருக்கும் இறைவனை நினைத்து ஒரு புண்ணியம் செய்தால் கோடி புண்ணியம் செய்ததற்கான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
வித்தியாச வடிவில் சிவலிங்கம்
பெரும்பாலான சிவலிங்கம் வடிவத்தில் இருந்து மாறுபட்ட லிங்க வடிவத்தில் இங்கு சிவபெருமான் காட்சியளிக்கிறார். சிவலிங்கத்தின் அடிப்பகுதி இங்கு சதுரங்க வடிவில் இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதே போன்று இறைவனுக்கு இடது புறம் இருக்கும் சதுர வடிவிலாக இருக்கும் லிங்கத்தை தொட்டு தரிசனம் மேற்கொண்டால் புண்ணியம் கிடைக்கும் என்பதும் மற்றொரு நம்பிக்கையாக உள்ளது.
கோயில் சிறப்பு அம்சங்கள்
கோயில் தலை விருட்சகமாக வில்வ மரம் உள்ளது. கோயில் குளத்தை நோக்கி கிழக்கு கோபுரம் அமைந்துள்ளது. கருவறையை நோக்கி துவஜ ஸ்தம்பமும் பலிபீடமும் காணப்படுகின்றன. விநாயகா, மேதா தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு மற்றும் விஷ்ணு துர்க்கை கோஷ்ட சிலைகள் கருவறைச் சுவரைச் சுற்றி அமைந்துள்ளன. சண்டிகேஸ்வரர் சன்னதியை அவரது வழக்கமான இடத்தில் காணலாம். தாயார் புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்மரின் சிற்பங்கள், ஊர்தவ தாண்டவ மூர்த்தி மற்றும் சிவபெருமானின் பல்வேறு நடன தோரணைகளை தூண்களில் காணலாம்.