சரபம் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்..காஞ்சி பக்தர்கள் பரவசம்..!
10ஆம் நாள் இன்று காலை சரபம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 10 ஆம் நாள் இன்று காலை சரபம் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் சக்தி பீட தலங்களில் ஒன்றானதும் உலகப் புகழ் பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 15-ந் தேதி தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
சிறப்பு தீபாராதனை
10-ம் நாளான இன்று காலை காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதி உடன் நீளம் நிற பட்டு உடுத்தி மனோரஞ்சிதம்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலை அருகே எழுந்தருளினார். யாகசாலை பூஜை நிறைவு பெற்றபின் கோயில் அருகே நின்று இருந்த சரபம் வாகனத்தில் எழுந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் ஆதிசங்கரர் முன் செல்ல மேள தாளங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சீபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சி காமாட்சி கோயில்
கோயில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார்.
பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது . சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர். அத்தருணம் பராசக்தி, காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்.
கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார். பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.