கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பெருவிழா தேர் பவனி - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிறிஸ்தவர்களின் விழாவான தேவமாதாவின் பிறந்தநாள் பெருவிழா கடந்த சில தினங்களாக நாடுமுழுவதும் உள்ள தேவாலயங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது,
தேனி மாவட்டம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் தேவமாதாவின் பிறந்தநாள் பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிறிஸ்தவர்களின் விழாவான தேவமாதாவின் பிறந்தநாள் பெருவிழா கடந்த சில தினங்களாக நாடுமுழுவதும் உள்ள தேவாலயங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் கடந்த வாரம் பங்குத்தந்தை பாரிவளன் தலைமையில், வேளாங்கண்ணி மாதாவின் திருஉருவம் பொறித்த திருக்கொடியானது, செபஸ்தியார் குருசடியிலிருந்து பவனியாக எடுத்துவரப்பட்டு தேவாலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் விருதுநகர் வட்டார அதிபர் பங்குதந்தை அருள்ராயன் ஏற்றிவைத்தார். பின்னர் இறைமக்கள் பங்கு கொண்ட திருப்பலியில் இணைந்து பயணிப்போம் என்னும் பொருளில் திருப்பலி நிறைவேற்றினார்.
கொடிஏற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா வரும் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலைவேளையில் அருட்சகோதரிகள், மறைகல்வி மாணாக்கர், இளைஞர் இளம்பெண், குழந்தையேசு அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், புனி செபஸ்தியார் அன்பியம், மற்றும் கம்பம், கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி இறைமக்கள் சிறப்பிக்கும் திருப்பலியை சிறப்பு அழைப்பாளர்களான அருட்தந்தைகள் தலைமையேற்று நடத்துகின்றனர்.
காதலியுடன் ஜாலியா சுத்த சம்பளத்துடன் லீவு! ஊழியர்களுக்கு செம்ம ஆஃபர் தந்த நிறுவனம்!
பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று இரவு திருத்தேர் பவனி நடைபெற்றது. ஆலயத்திலிருந்து தொடங்கும் தேர்ப்பவனி நிகழ்விற்கு முன்பாக சிறப்பு திருப்பலிகள் கூட்டுப் பிரார்த்தனைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்திலிருந்து கம்பம் நகரில் முக்கிய வீதிகள் வழியாகச் தேர் பவனி நடைபெற்றது. தேருக்கு முன்பாக கிறிஸ்தவ பெருமக்கள் மெழுகுதிரிகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
8ஆம் தேதி மாலை நற்கருணை ஆராதனை, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அருட்பணி பேரவை, நிதிக்குழு, விழாக்குழு, சேவா மிஷனரி அருட்சகோதரிகள் கம்பம் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற இந்த தேர் பவணியில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.