பூர்வீக கோயில் கும்பாபிஷேகம் - குடும்பத்துடன் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்
சீர்காழி அடுத்த பெருந்தோட்டத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு தரிசனம் செய்தார்.

சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ள விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் குடும்பத்தினருடன் பங்கேற்பு தரிசனம் செய்தார்.
விசாலாட்சி சமேத விஸ்வநாதர் - லட்சுமி நாராயண பெருமாள் கோயில்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில்கள். சிதிலமடைந்த இருந்த இந்த இரு கோயில்களை புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி பக்தர்கள் விரும்பினர். அதனை அடுத்து பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்புகளுடன் கோயில் புணரமைப்பு பணிகள் தொடங்கி, கட்டடங்கள் சீரமைப்பு, சிலைகள் வடித்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டது.

கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள்
அதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கும்பாபிஷேகம் தினமான இன்று மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 4 -ம் தேதி பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு, 7 -ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புனிதநீர் ஊற்றல்
அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேள தாள மங்கள வாத்தியங்கள் இசைக்க வேத விற்பன்னர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் விமான கலசத்தை அடைந்தது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத இரண்டு சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மூலஸ்தானத்தில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சுந்தரேசய்யர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Gokula Indira : ”ஏன் என் பெயரை போடல ? பதவி போய்டும்னு பயமா?” ஆவேசமான கோகுல இந்திரா..!

கிரிக்கெட் வீரர் அஸ்வின்
இந்த கும்பாபிஷேக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார். அஸ்வின் ரவிச்சந்திரன் தாயாரின் சொந்த ஊரான பெருந்தோட்டம் கிராமத்தில் உறவினர் உடன் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் மேற்கொண்டார். இந்த கோயில் அஸ்வின் குடும்பத்தினரின் பூர்வீக கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.






















