Chennai Bengaluru Expressway: 2 மணி நேரம் தான், இனி பெங்களூரு டூ சென்னை பறக்கலாம் - புதிய தேசிய நெடுஞ்சாலை தயார், இவ்ளோ அம்சங்களா?
Chennai Bengaluru Expressway: குடிபாலா - ஸ்ரீபெரும்பதூர் விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும்.

Chennai Bengaluru Expressway: சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை, நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதம் முற்றிலுமாக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை
5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க நாட்டின் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மற்றும் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்த இருநகரங்களை இணைக்கும் சாலை திட்டத்தையும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூரு- சென்னை விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடிபாலா - ஸ்ரீபெரும்பதூர் விரைவுச் சாலை திட்டம்:
பெங்களூரு -சென்னை விரைவுச்சாலை அல்லது தேசிய விரைவுச்சாலை 7 (NE-7) , சென்னை மற்றும் பெங்களூரு இடையே 258 கிமீ தூரத்திற்கு நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச்சாலையாகும் . இது பெங்களூரு பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள ஹோஸ்கோட்டிலிருந்து சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வரை இயங்கும். தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பதூரில் இருந்து ஆந்திராவின் குடிபாலா வரை இந்த திட்டத்தின் கீழ் 4 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கிருந்து பெங்களூரு வரையில் சாலை அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 105.7 கி.மீ. நீளத்திற்கு இந்த சாலை செல்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதன்படி, கார் மூலமாக சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரத்திலேயே பெங்களூரை சென்றடைய முடியும். இந்த சாலையில் ஸ்ரீபெரும்பதூர், ராணிபேட்டை மற்றும் மேல்படி ஆகிய பகுதிகளில் சுங்கச் சாவடிகள் அமைய உள்ளன.
நான்கு கட்டங்களாக பணிகள்:
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 106 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மொத்தம் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, முதற்கட்டமாக வாலாஜா பேட்டையில் இருந்து குடிபாலா வரையிலான 24 கிலோ மிட்டர் தூரத்திற்கான பணிகள் 72 சதவிகிதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட பணியான வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் 86 சதவிகிதத்திற்கும் மேல் முடிவுற்றது. அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான 25.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மூன்றாம் கட்டப்பணிகள் 52 சதவிகிதமும், காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 32.1 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்காம் கட்ட பணிகள் 65 சதவிகிதமும் நிறைவடைந்துள்ளது. இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ட்ரம்பெட் இண்டர்சேஞ்ச் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
குடிபாலா - வாலாஜாபேட், வாலாஜாபேட் - அரக்கோணம் மற்றும் அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையேயான திட்டப் பணிகள், நடப்பாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்பதூர் இடையேயான சாலை பணிகள் ஜுலை மாதம் வரையில் நீளும் என கூறப்படுகிறது. அதேநேரம், ட்ரம்பெட் இண்டர்சேஞ்ச் தொடர்பான கட்டுமான பணிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தொடங்கிய நிலையில், அதன் கட்டுமான பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தான் முடிவடையும் என தெரிகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளும் முடிவடையும் பட்சத்தில் நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதமே பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வரும். அப்படி நடந்தால் சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயணம் மிகவும் எளிதாக மாறிவிடும்.





















