EID Celebration: பக்ரீத் பண்டிகை; விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சிறப்பு தொழுகை - 700 பேர் பங்கேற்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
விழுப்புரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நகராட்சி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் கீழ் அண்ணா வீதியில் உள்ள மசூதி சார்பாக நகராட்சி பள்ளி மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், குழந்தைகள் என 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்துக்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், திருக்கோயிலூர் என பல்வேறு இடங்களிலும் பக்ரீத் பண்டிகைகாகன சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை:
பக்ரீத் பண்டிகை என்றாலே இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்து பக்ரீத்தை கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாகவே சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வாரச்சந்தையில் மட்டும் ஆடுகள் விற்பனை சுமார் 7 கோடி அளவிற்கு நடைபெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடு, கோழி மற்றும் மாடுகள் விற்பனை வழக்கத்தை விட அதிகளவில் நடைபெற்று வருகிறது.
பக்ரீத்தின் முக்கியத்துவம்:
தியாகத்தின் செயல் என்பத விட, பக்ரீத் என்பது அன்பின் கொண்டாட்டமாகும். இன்றைய நாளில் தயாரிக்கப்பட்ட உணவு மூன்று சம பாகங்களாக விநியோகிக்கப்பட வேண்டும். ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், இரண்டாவது பகுதி உறவினர்களுக்கும், மூன்றாவது பகுதி ஏழை மற்றும் எளியோருக்கும் வழங்க வேண்டும். பலியிடுதலின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வை அடையவில்லை என்றாலும், அவருடைய மக்களின் பக்தி அவரை சென்றடைகிறது என்று நம்பப்படுகிறது.