Diwali 2022 Lakshmi Pooja: தீபாவளியன்று வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி? எதைப் பின்பற்றலாம்?
Deepavali Lakshmi Pooja Tamil: இருளின் மீது ஒளி வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் இந்த தீபாவளி திருநாளில் வீடுகளில் பெருமளவிலானோர் லக்ஷ்மி தேவி வழிபாட்டில் ஈடுபடுவர்.
தீபாவளியின் போது மகாலட்சுமி பூஜை அல்லது லட்சுமி குபேர பூஜை முக்கியத்துவம் வருகிறது. தீபாவளியன்று மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க எவ்வாறான பூஜை முறைகளை செய்யலாம் என பார்க்கலாம்.
தீபாவளியை வரவேற்க வீடுகள் முழுவதும் வண்ணமயமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்க படுகின்றன. பல வகையான பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள் செய்யப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றுதான் இந்த தீபாவளி திருநாள். வீடுகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்று வண்ணமயமான மின் விளக்குகளின் வெளிச்சத்தில் காட்சியளிக்கும். சுற்றிலும் ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை உருவாக்கும் இந்த தீபாவளி குடும்பங்களாக சேர்ந்து கொண்டாடப்படுகிறது.
இருளின் மீது ஒளி வெற்றி கொண்ட நாளாக கருதப்படும் இந்த தீபாவளி திருநாளில் வீடுகளில் பெருமளவிலானோ லக்ஷ்மி தேவி வழிபாட்டில் ஈடுபடுவர்.
அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி மற்றும் முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கி தீபாவளி அன்று இரவு வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த மகாலட்சுமி பூஜை தீபாவளியின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஆகவே லக்ஷ்மி தேவியை வீட்டிற்கு வரவழைக்க தீபாவளிக்கு முன்னதாக வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மகாலட்சுமி தேவிக்கு வீடு எப்போதும் சுத்தமாக இருப்பதே மற்றும் பிடிக்கும் என கருதப்படுவதால், தூய்மையான இடங்களில் மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. தீபாவளியன்று காலையிலேயே வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரித்து உப்பு நீர் அல்லது புனித கங்கை நீராக பாவித்து நீரைத் தெளித்து வீட்டை தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் மகாலட்சுமிக்குரிய சிறப்பு பூஜைகளை செய்வதற்கு ஒரு தனியான இடத்தை அலங்கரித்து வைக்கவும். சற்று உயரமான அமைப்பைக் கொண்டவாறு ,சுவாமி சிலைகளை வைப்பதற்கேற்றவாறு பூஜை இடத்தை தயார் செய்ய வேண்டும். பின்னர் சிவப்பு நிறத்திலான துணியை அதன் மீது விரித்து அதில் ஒரு கைப்பிடி அளவு நவ தானியங்களை போட வேண்டும்.
தொடர்ந்து கலச வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஒரு வெள்ளி அல்லது செம்பு கலசத்தை எடுத்து, அதில் பாதிக்கு மேல் தண்ணீர் நிரப்பி, வெற்றிலை, சாமந்தி பூ, நாணயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து கலசத்தின் மேல் தேங்காயை வைக்க வேண்டும். பின்னர் கலசத்தை மா இலைகளால் அலங்கரித்து, பரப்பிய நவதானியத்தின் மேல் வைக்க வேண்டும். இதனை அடுத்து மகாலட்சுமி தாயார் மற்றும் விநாயகர் சிலைகளை குறித்த இடத்தில் வைக்க வேண்டும். பின்னர் லட்சுமி தேவிக்கு தாமரை மலர்களை படைக்க வேண்டும் .வெற்றிலை பாக்கு ,பழத்துடன், தாலி சரடு, மஞ்சள் ,குங்குமம் ,நாணயம் போன்றவற்றை மகாலட்சுமி தாயாருக்கும் விநாயகருக்கு முன்பாக வைக்க வேண்டும். மேலும் வேண்டுமானால் வியாபாரம் தொடர்பான மற்றும் தங்கம், செல்வம் தொடர்பான பொருட்களை அங்கு வைக்கலாம்
பின்னர் ஊதுவத்தி, தூபம் போன்றவற்றை ஏற்றி வீடு முழுவதும் காண்பித்து மகாலட்சுமி தாயாரை வரவேற்க வேண்டும். மகாலட்சுமி பூஜை வழிபாட்டில் குடும்ப உறுப்பினர்கள் நெற்றியில் திலகம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும். மந்திரம் ஓதி பூஜை தொடங்குவதற்கு முன்னர் சுவாமி விக்ரங்களுக்கு மாலைகள் இட்டு மலர்களால் மரியாதை செய்ய வேண்டும்.
சுவாமிக்கு மலர்களால் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வேண்டும் மந்திரங்கள் கூறி முடிந்ததும் குடும்பத்தினர் மலர்களால் மகாலட்சுமி தாயார் போற்றி வழிபடலாம்.
இறுதியாக செய்து வைத்துள்ள பிரசாதத்தை பூஜையில் வைக்கவும். முதலில் விநாயகப் பெருமானுக்கு வைத்துவிட்டு லட்சுமி தேவிக்கு வைக்க வேண்டும். பிரசாதத்தில் உலர் பழங்கள் ,லட்டுகள், பருப்பு வகைகள் ,பாதுஷா மற்றும் தேங்காய் உணவுகள் மேலும் பல இனிப்புகளையும் படைக்கலாம். இறுதியாக மகாலட்சுமி தேவிக்கு ஆரத்தி காட்ட வேண்டும். லட்சுமி தேவி பாடலுடன் ஆரத்தி காட்டி, மலர் தூவி, நமது வேண்டுதல்களை முன்வைத்து பூஜையை சிறப்புடன் நிறைவு செய்யலாம். சுவாமிக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.