Vinayagar Chaturthi 2024: சேலத்தில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா... டிஜிட்டல் விநாயகர், சமத்துவ விநாயகர் காட்சி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான பூமி உருண்டை மீது சிவன் பார்வதி கையில் விநாயகர் நடமாடனம் ஆடுவது போன்று சேலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேசன் சார்பாக 44 வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களையும் சாந்தப்படுத்த விநாயகர் அவரது தாய் தந்தையுடன் பூமியின் மீது நின்று கொண்டு நடனமாடுவது போன்று வியக்க வைக்கும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக விநாயகர் தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் விதமாக மின்னொளி மூலமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிரம்மாண்டமான பூமி உருண்டை மீது சிவன் பார்வதி கையில் விநாயகர் நடமாடனம் ஆடுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் விதமாக சிலைகள் அமைக்கப்படுவதாகவும் தற்போது பூமி வெப்பமயமாகுதால் காரணமாக இயற்கைபேரிடர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து கோள்களையும் விநாயகர் நடனமாடி சாந்தப்படுத்துவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், டிஜிட்டல் உலகை நினைவுகூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் விநாயகர் சிலையை வியந்து பார்த்து சிலையில் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல், சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கணபதி ஓமம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பழவகைகள் மற்றும் சந்தனம், இளநீர், விபூதி, மஞ்சள், தயிர், தேன், பால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதுதொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகணபதிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.
பின்னர் தங்ககவசம் சாத்தப்பட்டு தங்ககவசத்தில் ராஜகணபதி அழகுற காட்சியளித்தார். குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராஜகணபதி தரிசனம் செய்தனர். அப்போது அருகம்புல், எருக்கம் பூமாலை உள்ளிட்டவைகளை கொண்டு வந்து கொடுத்து ராஜகணபதிக்கு சாத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ராஜகணபதி திருக்கோவிலில் அண்ணாச்சி, மக்காச்சோளம், சாத்துக்குடி, இளநீர், தென்னை பூ உள்ளிட்டவைகளைக் கொண்டு கோவில் முழுவதும் சிறப்பு தோரணம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சேலம் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்குள் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, சேலம் கோட்டை மைதானம் பகுதியில் அரசமர விநாயகர் கோவிலில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து சமத்துவ விநாயக சதுர்த்தி கொண்டாடினர். அப்போது விநாயகருக்கு பூஜை செய்து பிரசாதங்களை பொதுமக்களுக்கு வழங்கியும், இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைவரும் பிரசாதத்தை ஒருவருக்கொருவர் விநாயகருக்கு படைத்து வழிபட்ட பிரசாதத்தை ஊட்டிக்கொண்டனர். இந்த சமத்துவ விநாயக சதுர்த்தி விழா அனைத்து தரப்பினரையும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமியர், கிருத்துவர், இந்து ஆகிய மூவரும் இணைந்து அன்னதானம் வழங்கினர்.