ஆவணித் திருவிழா: சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்தில் வீதி உலா
பச்சைசாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்தத் திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் இரண்டாவது நாளான சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்மனும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இரண்டாவது திருவிழாவான அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், வள்ளி அம்மன் கோவில் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயாகர் கோயில் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி தாசில் ஆண்டியப்ப பிள்ளை மண்டபம் சேர்ந்தனர். மாலையில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், வள்ளியம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆவணித் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று காலையில் சுவாமி பூங்கடேயச் சப்பரத்திலும், அம்மன் கேடயச் சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலையில் சிவன்கோயிலிருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகிறார்கள்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்காக்கும் கடவுளான விஷ்ணுவின் திருவண்ணக் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளிய திருக்காட்சியை தரிசனம் செய்தால், வேண்டும் வரமெல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பச்சைசாத்தியில் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக, காக்கும் அரசனாக வலம் வருவதால் அந்தத் திருக்கோலத்தை தரிசனம் செய்வார்கள். பச்சைசாத்தித் திருவிழாவைக் காணத்தான் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.வருடத்திலேயே ஆவணி, மாசித் திருவிழாக்களில் இந்த இரண்டு நாள் திருவிழாக்களில் மட்டும்தான் ஷண்முகர் உலா வருவார் என்பது மிக விசேஷமாகப் பார்க்கப்படுகிறது.