Akshaya Tritiya 2023:அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் செல்வம் சேருமா? வேறு என்னென்ன வாங்கலாம்?
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினால் தங்கம் சேருமா? வேறு எந்தெந்த பொருட்களை வாங்கலாம் என்பதை இங்கே காணலாம்..
அட்சய திருதியை என்றால் என்ன?
அட்சய திருதியை இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இது தமிழ் மாதமான சித்திரையில், வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அட்சய என்றால் வளர்க என்று பொருள். அந்த நாளில் எது வாங்கினாலும் அது மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை வருகிறது.
தானம்
ஆட்சய திருதியை நாளில் பொருட்களை வாங்குவதை விட மற்றவர்களுக்கு தானம் செய்வது மிகவும் நல்லது என கூறப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு தானம் செய்வதுதான்.
அட்சய திருதியையில் என்ன வாங்கலாம்?
இந்நாளில் எந்த மங்களகரமான பொருட்களை வாங்கினாலும் அது பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கலமணி, லட்சுமி படம், குங்குமசிமிழ், பணம், சர்க்கரை உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்கலாம்.
தங்கம்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது மென்மேலும் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்குவதற்கு நகை கடைகளை நோக்கி படையெடுப்பதை பார்க்க முடியும். குறிப்பாக நடுத்தர மக்கள் இன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் என எண்ணி கடைக்கு செல்கின்றனர். ஆனால் அங்கு அலைமோதும் கூட்ட நெரிசலில் சிக்கி இன்னைக்கு ஏன் தான் நகைக்கடைக்கு வந்தோமோ என்ற கசப்பான அனுபவத்துடன் செல்கின்றனர். அரிசி மளிகை பொருட்கள், தங்க நகைகள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை இந்த நாளில் வாங்கினால் அவை அதிகமாக சேரும் என்ற நம்பிக்கை உள்ள நிலையில், தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கினால் அவை மேலும் சேர்ந்து செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையிலேயே ஏராளமான மக்கள் இந்த நாளில் தங்க நகைகளை வாங்குகின்றனர்.
நகை வியாபாரிகளின் யுக்தி
வீட்டிற்கு அத்தியாவசியமான பல பொருட்களை அட்சய திருதியைக்கு வாங்கலாம் என்ற நிலையில் தங்க நகையை மட்டும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்கு நகைக்கடை விளம்பரங்களே காரணம். தங்க மற்றும் வைர நகைகளின் விற்பனையை அதிகரிக்கவே இந்நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கையை வியாபாரிகள் உருவாக்கியிருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. எனினும், தங்கம் ஒரு குண்டுமணி அளவுக்கேனும் வாங்கினால் மேலும் செல்வம் சேரும் என்னும் நம்பிக்கை தற்போது அதிகரிப்பதால், சீட்டுகளிலும், நேரடி தொகையாகவும் கொடுத்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.