(Source: ECI/ABP News/ABP Majha)
ABP கோயில் உலா: மயிலாடுதுறை மாவட்ட கோயில்களில் ஆடி கடைவெள்ளி வழிபாடு - பரவசத்தில் பக்தர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிமாத கடை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றனர்.
ஆடி மாதம் நிறைவு மற்றும் ஆடி கடைவெள்ளிக்கிழமையை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
நிறைவு பெறும் ஆடி மாத திருவிழாக்கள்
கடந்த ஜூலை மாதம் 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் கடந்த ஒரு மாதமாக ஆடி மாத திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வந்தனர். இந்நிலையில் இன்றுடன் ஆடிமாதம் முடிவதுடன் அது ஆடி கடைவெள்ளி கிழமையாக அமைந்துள்ளது. ஆகையால் இன்று பல்வேறு கோயில் ஏராளமான வழிபாடு நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை வண்டிக்கார தெரு பிரசன்ன மாரியம்மன் கோயில்
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயிலாடுதுறை புதிய பழைய பேருந்து நிலையத்திற்கு இடையே வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில். வண்டிக்கார தெரு என்பது மயிலாடுதுறையின் தி.நகர் ஆகும். இந்த தெரு முழுவதும் தரை கடை உட்பட்ட ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி அமைந்துள்ள இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகள் இணைந்து பால்குட திருவிழா நடத்துவது வழக்கம்.
ஆண்டு பால்குடம் திருவிழா
அந்த வகையில் இந்தாண்டு 42வது ஆண்டாக பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி மற்றும் கையில் அரிவாள் ஏந்திய கருப்பசாமி ஆகிய வேடங்கள் அணிந்து கலைஞர்கள் நடனமாட, அதனை தொடர்ந்து விரதம் இருந்த திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதி வழியாக வந்து இறுதியில் ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பாலினை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பால்குடம்
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ முத்து மாரியம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன் ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த அம்மன்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க பால்குடம் நகரின் முக்கிய வீதிகளான ரயில்வே ரோடு, தாமரை குளம் தெரு, வள்ளுவர் தெரு, விளக்கு முகத்தெரு வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. பின்னர் முத்து மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.