Aadi Pooram 2024: கோலாகலமாக நடைபெற்ற திருக்கடையூர் கோயில் திருத்தேரோட்டம்..!
ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
![Aadi Pooram 2024: கோலாகலமாக நடைபெற்ற திருக்கடையூர் கோயில் திருத்தேரோட்டம்..! Aadi Pooram 2024 Mayiladuthurai Thirukkadaiyur temple aadipuram car festival - TNN Aadi Pooram 2024: கோலாகலமாக நடைபெற்ற திருக்கடையூர் கோயில் திருத்தேரோட்டம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/07/9c2452763d0f8cf5c193aa121cd14ff81723025432349733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்குகிறது.
மார்க்கண்டேயர் உயிரை காப்பாற்றிய சிவபெருமான்
புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்கை பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன. இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, ,80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் பல சிறப்புகள்
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
ஆடிப்பூரம்
இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 29 -ஆம் தேதி அபிராமி அம்மன் சன்னதியில் ரிஷப கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், சண்டிகேஸ்வரர் பல்லக்கில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிம்ம லக்னத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது.
திருத்தேரோட்டம்
தொடர்ந்து கோயிலில் தினமும் சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாரதனை, அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். இந்த ஆடிப்பூரு தேர் திருவிழாவில் தருமபுரம் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமி கட்டளை தம்பிரான் சாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)