சீனாவின் சாதனை! 2 மணி நேர பயணம் - 2 நிமிடத்தில்.. உலகின் உயரமான பாலம்!
சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பீப்பன் நதியின் மேலே 625 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான Huajiang Grand Canyon பாலத்தை கட்டி அசத்தியுள்ளனர்

2 மணி நேர பயணத்தை 2 நிமிடங்களிலேயே செல்லும் வகையில் உலகின் மிக உயரமான பாலத்தை கட்டி அசர வைத்துள்ளது சீனா.
சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பீப்பன் நதியின் மேலே 625 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான Huajiang Grand Canyon பாலத்தை கட்டி அசத்தியுள்ளனர் சீன கட்டிடக்கலை நிபுணர்கள். Canyon பாலத்தின் மொத்த நீளம் 2,900 மீட்டர் மற்றும் கோபுரத்தின் பிரதான இடைவெளி நீளம் 1420 மீட்டராக இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்கில் இருந்து 625 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் செப் 28 ஆம் தேதி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பாலத்தின் உறுதி தன்மையை நிரூபிக்கும் விதமாக கடந்த மாதம் பாலத்தின் மீது 96 லாரிகள் அனுப்பப்பட்டன. மேலும் இந்த பாலத்தில் 400 சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பாலத்தில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் உடனடியாக சரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Huajiang Grand Canyon பாலத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர். உலகில் உள்ள கட்டிடக்கலை துறையினர் பார்வையில் இந்த பாலம் ஒரு புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது. இந்தபாலத்தின் மூலம் குய்சோ மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தங்களது பயணத்தூரம் 2 மணி நேரத்தில் இருந்து 2 நிமிடமாக குறைந்துவிடும் என பெருமூச்சு விடுகின்றனர். மழை காலங்களில் பயணம் செய்யும் போது திடீரென நிலச்சரிவு ஏற்படுவதால் மிகவும் பாதிப்புக்குள்ளானதாகவும் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்பட்டதாகவும் அந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஆற்றை கடக்க அதிகமான வாகன எரிபொருள் மற்றும் பொருட் செலவும் ஏற்பட்டதாக சொல்கின்றனர். ஆனால் தற்போது புதிய பாலத்தின் மூலம் இவை அனைத்தும் சரிசெய்ய பட்டு விட்டதாக மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Huajiang Grand Canyon பாலம் இரண்டு சாதனைகளை படைத்துள்ளது. முதலாவதாக உலகின் மிக உயரமான பாலம் எனவும் இரண்டாவதாக மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளி பாலம் எனவும் அங்கீகரிக்கப்படுள்ளது. இந்த பாலத்தை போக்குவரத்தை சுற்றுலா தலமாகவும் இருக்கும் வகையில் கட்டி முடித்துள்ளது சீனா. இந்த பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.























