”ஓய்ந்தது பரப்புரை - கடைசி கட்ட திருப்பங்கள் இலங்கையை ஆளப்போவது யார்?” - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
22 மில்லியன் மக்களின் தலைவனாக வரப்போவது யார் என்பதை தீர்மானிக்க சனிக்கிழமை வாக்களிப்பு. ஞாயிற்றுக்கிழமை குட்டித் தீவின் ஜனாதிபதி யார் எனத் தெரிந்துவிடும்
போராட்டங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இன பேதங்களுக்கும் இயற்கையின் அழகிற்கும் பெயர்ப்போன தீவுதான் இலங்கை. 2.2 கோடி பேர் வசிக்கும் இந்தத் தீவின் புதிய ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க இருக்கிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 39 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கின்றனர். இதில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டாலும், அவருடைய பெயரும் வாக்குச் சீட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வாரங்களாக இலங்கையின் பட்டிதொட்டியெங்கும் விறுவிறுவென நடைபெற்ற தேர்தல் பரப்புரை, புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. தற்போது, சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில்தான் தற்போது கடைசி நேர பரப்புரை மற்றும் வாக்காளர்கள் இடையே ஏற்பட்ட மனவோட்டங்கள் குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க:
இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டில், 39 பேர் போட்டியிட்டாலும், 4 பேர்தான் மிகவும் தெளிமுகமானவர்கள். தற்போதைய ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சையாக இம்முறை களத்தில் இறங்கியுள்ளார். இதற்குமுன் பல முறை போட்டியிட்டாலும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இதுவரை அவர் தேர்வு செய்யப்படவில்லை. தற்போதுகூட, கோத்தபய துரத்தப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் அவர் ஜனாதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம் முறை, தம்முடைய பாரம்பரிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளையும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளையும் குறிவைத்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி உள்ளார். எல்லோரும் பயந்து ஓடி ஒளிந்த போதும், பொருளாதார சரவிலிருந்து தம்மால் மட்டுமே நாட்டை மீட்க முடியும் என்பதை நிருபித்துள்ளதாகவும், மீண்டும் வாய்ப்பு தந்தால், இலங்கையை பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடாக மாற்றுவேன் என தாம் செய்த சாதனையை மேற்கோள் காட்டி வாக்குகளைக் கோரியுள்ளார். ரணில் மீது பல்வேறு குறைகளும் குற்றச்சாட்டுகளும் அரசியல் ரீதியாக வைக்கப்பட்டாலும், யதார்த்த ரீதியில் பார்த்தால், சிக்கலான நேரத்தில் பதவியும் பொறுப்பும் ஏற்று, நாட்டை மீட்டெடுத்து உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதை இலங்கைவாசிகள் மறக்கமுடியாது. ஆனால், இவை வாக்குகளாக மாறுமா என்பதை உறுதியாக கூற முடியாது என்கிறார் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான காந்தகுமார் விஸ்வராசா. அவருடைய பழைய அணுகுமுறைகள், இன்னமும் மக்கள் மனத்தில் நிலையாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
சஜித் பிரேமதாஸ :
இரண்டாவது பெரும் போட்டியாளர் என்றால் அது சஜித் பிரேமதாஸ. எஸ்.ஜே.பி ( Samagi Jana Balawagaya) கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ள இவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில், கிட்டத்தட்ட 42 சதவீத வாக்குகளைப் பெற்று, கோத்தபய ராஜபக்சவிற்கு கடும் போட்டியைக் கொடுத்தார். அதிலும், தமிழர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெற்று இருந்தார். ஆனால், இம்முறை தமிழர்கள் மற்றும் இஸ்லாமியார்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக பெற முடியுமா என உறுதியாகச் சொல்லமுடியாது எனக் கூறுகிறார் யாழ்ப்பாணத்தின் அரசியல் ஆர்வலர் ஞானேந்திரன். இம்முறை, ரணிலும், சஜித்தும் வாக்குகளைப் பிரித்துக் கொள்வார்கள் என்றும் போதாக்குறைக்கு பல தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனும் வாக்குகளைப் பிரித்தெடுப்பதால், சிந்தால் சிதறாமல் இம்முறை சிறுபான்மையினரின் வாக்குகளை, ஒருவர் அள்ளுவது மிகவும் சிரமம் என்கிறார் அரசியல் ஆர்வலர் ஞானேந்திரன்.
அனுர குமார திஸநாயக:
3-வது பெரும் வேட்பாளர் என்றால் அது ஜே.வி.பி ( Janatha Vimukthi Peramuna) கட்சியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அனுர குமாரா திஸநாயக. பழம் அரசியல் தலைவர்கள் மீதான பெரும்பான்மையான சிங்களவர்களின் கோபங்களை, தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, பெரும் வாக்கு அறுவடையைச் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் காலேவில் வசிக்கும் மூத்த இலங்கைவாசியான குணரத்ன டி சில்வா. அவருடைய கூற்று மட்டுமல்ல, இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் முந்தியிருக்கிறார் அனுர குமார திஸநாயக. தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே, அவருடைய ஆதரவாளர்கள் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர். சிங்கள அடிப்படைவாத கட்சியான ஜே.வி.பி-க்கு புதிய முகம் கொடுத்து, அனைவரும் ஏற்கும்வகையில் சிங்கமென கர்ஜித்து வாக்குகளைச் சேகரித்து இருக்கிறார் இவர். அவருடைய கர்ஜனை வாக்குகளாக மாறுமா என்பதை ஞாயிற்றுக்கிழமைதான் தெரிய வரும்.
நமல் ராஜபக்ச:
4-வது பெரிய வேட்பாளர் என்றால், அது முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகன், நமல் ராஜபக்ச. இவர், தம்முடைய எஸ்.எல்.பி.பி. (SriLanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்குகிறார். விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டுதான் அவர் களமிறங்கி இருப்பதாகவும், அவருடைய இலக்கு ஜனாதிபதி தேர்தல் இல்லை என்றும் கூறுகிறார் தேர்தல்களை உற்றுநோக்கும் தலைநகர் கொழும்புவாசியான சுஜீவன். ஏனெனில், நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான கோபம் இன்னமும் மக்களுக்குத் தீரவில்லை என உறுதிப்பட கூறுகிறார் சுஜீவன்.
மற்ற முக்கிய வேட்பாளர்கள் யார்? யார்?
5-வது பெரிய வேட்பாளர் என்றால் பல தமிழ் கட்சிகளின் பொதுவேட்பாளர் என்ற பெயரில் அரிய நேத்திரன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கிறது. இதுமட்டுமல்ல, மேலும் சில முக்கிய தமிழ்த் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, தமிழர்களின் ஆதரவு ஒருவருக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்குமா என்பதை உறுதிபடத்தெரிவிக்க முடியாத சூழலே நிலவுகிறது. இது, தமிழர்கள் செறிவாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, மலையகப் பகுதிகளிலும் இதே போன்ற குழப்பமான சூழல்தான் காணப்படுகிறது. அதேபோல், தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவு ஒருவருக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகமே.
இலங்கையில் தமிழர்கள்:
இலங்கை பூர்விக தமிழர்கள், மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இருப்பார்கள். எனவே, இவர்கள் வாக்குகள் சிதறுவது, ஜே.வி.பி-யின் அனுர குமாரா திஸநாயகவுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் காந்தகுமார் விஸ்வராசா. இதற்கு முன்பெல்லாம், தமிழர்களின் வாக்குகள் குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பெரும்பான்மையாகச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. அது இம்முறை இருக்குமா என்பது தெளிவற்று இருக்கிறது என்பதே கள நிலவரம்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
இந்த 5 பேரைத் தவிர்த்து, கோத்தபய ராஜபச்சவை துரத்தியடித்த புரட்சிக்குப் போராடிய இளைஞர் பட்டாளத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் நுவன், ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் ஃபொன்சேகா, சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட 34 பேர் களத்தில் உள்ளனர். இவர்களால் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். எனவே, ரனில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுர குமார திஸநாயக ஆகிய 3 பேருக்கு இடையேதான் பிரதான போட்டி இருக்கும். இதில் அனுர குமார திஸநாயக முந்துவதாக கருத்துக் கணிப்புகள் கூறினாலும், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும் போதுதான், அவர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படுவார். இல்லையெனில், 2-வது மற்றும் 3-வது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்தான் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஒவ்வொரு வாக்காளரும், பிரதான முதல் வாக்கு மற்றும் 2வது , 3-வது விருப்ப வாக்கு என 3 வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை 3 பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு, விருப்பு வாக்குகளை எண்ணிய பிறகே, யார் வெற்றியாளர் எனத் தெரிய வரும் எனப் பலரும் எண்ணுகின்றனர். முதல் பிரதான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளைப் பெறுவது கடினம் என்றே கருதுகின்றனர். தேர்தல் பரப்புரை மற்றும் வாக்காளர்களின் மனவோட்டங்களைப் பார்க்கும்போது, அனுர குமார-வை சிறுபான்மை மக்கள் பொதுவாக ஆதரிக்கவில்லை என்பதை உணர முடிகிறது எனக் கூறும் பத்திரிகையாளர் காந்தகுமார், யார் வந்தாலும் தமிழர்களுக்கு நன்மையோ அரசியல் தீர்வோ கிடைக்காது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல, ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியடைந்தாலும் நாடாளுமன்றத்தில், அவர்களுக்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அரசியல் சிறப்பாக நகரும். இல்லாவிட்டால் அடிக்கடி சிக்கல்கள் வருவது வாடிக்கையாகிவிடும் என்பதே யதார்த்தம் என்பதையும் பதிவு செய்கிறார் காந்தகுமார்.
அதேபோன்று, இந்தியப் பெருங்கடல் புவி அமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த சிறிய நாடான இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை, இந்தியா, அமெரி்க்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், சீனா ஆகியவை கூர்ந்துக் கவனிக்கின்றன. ரனில், சஜித், அனுர திஸநாயக ஆகிய மூவரையும் இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் சந்தித்துப் பேசியதும், யார் வெற்றிப் பெறப்போகிறார் என்பதில் குழப்பம் நீடிப்பதையே காட்டுகிறது எனவும் இலங்கைவாசிகள் பேசுகின்றனர்.