Omicron BF.7 : ஒமைக்ரான் BF.7 வகை வைரஸ் அதி தீவிரமாக பரவும் ; கவனமாக இருக்க எச்சரிக்கும் மருத்துவர்கள்..
Omicron BF.7 : இது ஒரிஜினில் வகையான ’D614G’ வைரஸ் வகையை விட அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் உருமாறிய BF.7 வகை தொற்று சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வகை வைரஸ் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. கொரோனா உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தற்போது, BF.7 வகை தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் BF.7 வகை தொற்று மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
BF.7 வகை கொரோனா வைரஸ் :
உலக அளவில் பரவ தொடங்கியுள்ள BF.7 ரக ஒமைக்ரான் கொரோனா வைரஸ் SARS-CoV-2 - வில் இருந்து உருமாறிய வைரஸ் என்றும் இதன் செல்கள் மரத்தின் கிளைகள் போல உருமாற்றம் அடைந்து வளரக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் BA.5.2.1.7 -வகையை போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் தொடக்கத்தில் வெளியான ‘Cell Host and Microbe’ என்ற ஆய்விதழில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, BF.7 ஒமைக்ரான் வைரஸ் தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும், வேகமாக பரவ கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரிஜினில் வகையான ’D614G’ வைரஸ் வகையை விட அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை தொற்று பற்றிய ஆய்வுகளின்படி, கொரொனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருப்பினும் அவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 5 சதவீத ஒமைக்ரான் BF.7 வகை கொரோனா பதிவாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த அக்டோபரில் 7.26 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் ஒமைக்ரான் BF.7 ரக தொற்று பாதிப்பால் இதுவரை மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறுமா?
BF.7 வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக தீவிரமாக மாறுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள வைராலஜி மருத்துவர், “ இந்தாண்டில் புதிதாக உருமாற்றம் அடைந்த வைரஸ் உருவாகவில்லை என்றாலும் அதன் துணை வகை வேக பரவி வருகிறது. இது உலக அளவில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவு என்றாலும், கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பலனளிக்குமா?
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டபோது, அதன் பரவலை கட்டுப்படுத்தில் தடுப்பூசிகள் உதவியா இருந்தது. ஆனால், ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகம் என்பதால் அதனை கட்டுப்படுத்துவது கடினமானதுதான். இருப்பினும், தடுப்பூசிகள் ஒமைக்ரான் வகை தொற்றால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்துவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஒமைக்ரான் ரக தொற்றால் உயிரிழந்துள்ள எண்ணிக்கை குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.