இலங்கைக்கு புதிய அதிபர்.. சவால்களை சமாளிப்பாரா அனுரா குமார திசாநாயக்க?
இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசாநாயக்க முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இலங்கையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் களம் கண்ட அனுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் அந்நாட்டின் 9ஆவது அதிபராக இன்று அவர் பதவியேற்று கொண்டார்.
மக்களால் AKD என அறியப்படும் அனுரா குமார திசநாயக்க, இலங்கையின் முதல் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றும் அதிபராவார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள அவர் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அனுரா குமார திசாநாயக்க முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பொருளாதாரம்:
கடந்த 2022 ஆம் ஆண்டு, அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட கடுமையான பற்றாக்குறையால் இலங்கையின் பொருளாதாரம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்காலிக நடவடிக்கைகளை எடுத்தாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
அந்நாட்டு பணவீக்கம் 70 சதவிகிதத்தில் இருந்து 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதேபோல, நெருக்கடியின் உச்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் 7.3% ஆக சுருங்கியது. கடந்த ஆண்டு 2.3% ஆக சுருங்கிய பொருளாதாரம், இந்தாண்டு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு திரும்புவதை இலங்கையின் புதிய உறுதி செய்ய வேண்டும். முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும். 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 25 சதவிகிதத்தினர் வறுமையில் உள்ளனர். அவர்களை வறுமையில் இருந்து வெளியேற உதவ வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் கடனும்:
கடனால் சிக்க தவித்த இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக சர்வதேச நாணய நிதியம் வழங்கியது. இதன் மூலம், இலங்கை கையிருப்புகளை அதிகரிக்கவும், அதன் நாணய வீழ்ச்சியைத் தடுக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் உதவியது.
சீனா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து பெற்ற சுமார் 10 பில்லியன் டாலர் கடனை மறுகட்டமைக்கும் ஒப்பந்தங்களில் கடந்த ஜூன் மாதம் இலங்கை கையெழுத்திட்டது. 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சர்வதேச கடன் பத்திரத்தை மறுகட்டமைப்பதற்கான வரைவு ஒப்பந்தமும் கடந்த வாரம் கையெழுத்தானது.
சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் வரி வசூலிக்கப்படும் என ரணில் தலைமைிலான இலங்கை அரசு உறுதி அளித்திருந்தது. அதில், திருத்தங்களை மேற்கொள்ள திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்துவோம் என உறுதியளித்துள்ளார்.
வரி விதிப்பு:
சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளின் கீழ் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக திசநாயக்க உறுதியளித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் கீழ் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது புதிய அதிபருக்கு பெரும் சவாலாக உள்ளது.
புவிசார் அரசியல்:
இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் இருப்பிடம், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது, குறிப்பாக இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு விரிவடைவதற்கு முக்கிய தளமாகவும் பார்க்கப்படுகிறது. இலங்கை உடன் நெருங்கிய உறவை மேற்கொள்ள இந்தியா முயன்றாலும், சீனா இலங்கையின் நெருங்கிய கூட்டாளியாக உள்ளது. 2006 முதல் 2022 வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 11.2 பில்லியன் டாலர் மானியங்கள் மற்றும் கடன்களை இலங்கைக்கு சீனா வழங்கியுள்ளது.
இதனிடையே, இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்று, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து உள்ளது. இந்த நடவடிக்கை துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை இந்தியாவிற்கு எழுப்பியுள்ளது.