Prigozhin Alive: புதினை அலறவிட்ட வாக்னர் கூலிப்படை தலைவர் இறக்கவில்லையா? தொடரும் மர்மம்..
விமான விபத்தில் பிரிகோசின் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவரது இறப்பில் பல மர்மங்கள் தொடர்வதாக உலக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக உள்நாட்டில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின், சமீபத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ரஷியா ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் கூலிப்படை:
ரஷியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படை நடத்திய கிளர்ச்சியை தொடர்ந்து, ரஷியா அரசுக்கும், வாக்னர் கூலிப்படைக்கும் இடையே உடன்படிக்கை எட்டப்பட்டதாக தகவல் வெளியானது. உடன்படிக்கையை தொடர்ந்து, பிரிகோசின் பெலாரஸில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், எதிர்பாராத விதமாக டிவெர் மாகாணத்தில் குசென்கினோ கிராமத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இதில், பயணித்த பிரிகோசின்
உயிரிழந்தாக ரஷியா அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
விமான விபத்தில் பிரிகோசின் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவரது இறப்பில் பல மர்மங்கள் தொடர்வதாக உலக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரிகோசின் உயிரோடு இருக்கிறாரா?
”ரஷிய அரசுக்கு விசுவாசமாக இல்லாத யாருக்கும் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு சான்று தான் பிரிகோசின் மரண செய்தி” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் கிளப்பினார். இதேபோன்று போலந்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ரஷியா தான் திட்டமிட்டு பிரிகோசினை கொன்று விட்டதாக கண்டனங்களை பதிவு செய்தன.
இந்த நிலையில், பிரிகோசினின் புதிய வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், தனது உடல் நிலை குறித்தும் தனக்கு வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றியும் பிரிகோசின் பேசியுள்ளார். ராணுவ அதிகாரிகள் அணியும் பச்சை நிற ஆடையில் ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் பிரிகோசின், வலது கையில் வாட்ச் அணிந்திருக்கிறார்.
இந்த வீடியோ, பிரிகோசின் இறப்பதற்கு முன்பு அவர் ஆப்பிரிக்காவில் இருந்தபோது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது உண்மை தகவலா என்பது உறுதி செய்யப்படவில்லை. வாக்னர் குழுவுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனலால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆகஸ்ட் 21 அன்று வெளியிடப்பட்ட வீடியோவில் பிரிகோசின் அணிந்திருந்த அதே ஆடையைதான் இந்த வீடியோவிலும் அவர் அணிந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா, நான் எப்படி இருக்கிறேன் என்று விவாதிப்பவர்களுக்கு நான் ஆப்பிரிக்காவில் இருக்கிறேன் என்பதை சொல்லி கொள்கிறேன். என்னை அழிக்க நினைக்கும், எனது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது, நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன் பற்றி விவாதிக்க விரும்பும் நபர்களுக்கு, அனைத்தும் நன்றாக இருக்கிறது என சொல்லி கொள்கிறேன்" என பிரிகோசின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.