Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஒபாமாவின் ஸ்டைலை பின்பற்றுகிறாரா தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமி
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வழியை விவேக் ராமசாமி பின்பற்றி வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
களைகட்டிய அமெரிக்க அதிபர் தேர்தல்:
பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். வேட்பாளர் போட்டியில் போட்டியிட்டு, சொந்த கட்சியினர் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ அவரே, கட்சியின் சார்பில் அமெரிக்காவில் தேர்தலில் நிற்க முடியும்.
ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோர் அதிபருக்கான வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர, இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்வில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
மாஸ் காட்டும் விவேக் ராமசாமி:
இதில், மற்றவர்களை காட்டிலும் தொழிலதிபரான விவேக் ராமசாமிக்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு பெருகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமியின் பெற்றோர்கள் கேரளாவில் வாழ்ந்து வந்துள்ளனர். எந்தளவுக்கு ஆதரவு பெருகி வருகிறதோ, விவேக் ராமசாமிக்கு எதிராக அதே அளவுக்கு விமர்சனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வழியை விவேக் ராமசாமி பின்பற்றி வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கிடையே நேற்று விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, தன்னை முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் ஒப்பிட்டு பேசிய சக வேட்பாளரும் முன்னாள் நியூ ஜெர்சி கவர்னருமான கிறிஸ் கிறிஸ்டிக்கு பதிலடி அளித்தார்.
விமர்சனத்திற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த விவேக் ராமசாமி:
வேடிக்கையான கடைசி பெயரைக் கொண்ட ஒல்லியான பையன் என ஒபாமாவுடன், விவேக் ராமசாமியை ஒப்பிட்டு கிறிஸ் கிறிஸ்டி கேலி செய்தார். இதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த விவேக், "வீட்டில் உள்ள அனைவரின் மனதிலும் இன்றிரவு இருக்கும் கேள்வியை மட்டும் சொல்கிறேன். வேடிக்கையான கடைசி பெயரைக் கொண்ட இந்த ஒல்லியான பையன் யார், இந்த விவாத மேடையின் நடுவில் அவர் என்ன செய்கிறார்? என அனைவரும் கேட்கின்றனர்.
நான் உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன். நான் அரசியல்வாதி அல்ல. நீங்கள் சொல்வது சரிதான். நான் ஒரு தொழிலதிபர். எனது பெற்றோர் 40 ஆண்டுகளுக்கு முன்பு பணமின்றி இந்த நாட்டிற்கு வந்தனர். ஆனால், தற்போது, நான் பல பில்லியன் டாலர் நிறுவனங்களுக்கு சொந்தக்காரன்.
அதுதான் அமெரிக்க கனவு.
நாங்கள் எதையாவது செய்யாவிட்டால் அந்த அமெரிக்க கனவு எங்கள் இரண்டு மகன்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும் இருக்காது என்று நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன்" என்றார்.