China Spy Balloon Video: சீனா உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்.. கண்டனம் தெரிவித்த சீனா.. வைரலாகும் வீடியோ
China Spy Balloon Shot Down Video: சீன உளவு பலூனை கரோலினா கடற்கரையில் இருந்து அமெரிக்க இராணுவம் நேற்று சுட்டு வீழ்த்தியது.
சீன உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்றை, கரோலினா கடற்கரையில் இருந்து அமெரிக்க இராணுவம் நேற்று சுட்டு வீழ்த்தியது. சீனா இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது என்றும் அது உளவு விமானம் இல்லை சிவிலியன் விமானம் என்றும் தெரிவித்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Incredible HD footage of the Chinese surveillance balloon being shot down. pic.twitter.com/K1GxdcJuH1
— Graham Allen (@GrahamAllen_1) February 4, 2023
சீனாவின் உளவு பலூன்:
சீனாவின் உளவு பலூன் ஒன்று அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் பீஜிங்குக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த சர்ச்சை வெடித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர். வட அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் டிஃபன்ஸ் கமாண்ட் (NORAD) "இந்த உளவு பலூனை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த உளவு பலூன் அளவில் மூன்று பேருந்துகளை ஒன்றாக இணைத்ததுபோல் இருக்கின்றது. அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறக்கும் இந்த உளவு பலூனால் எவ்வித தகவலும் பெறமுடியாத படிக்கு பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தது.
சீன உளவு பலூன் அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்தது தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விளக்கமும் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். ஆனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தான், அந்த பலூன் சுட்டு வீழ்த்த முடியாத நிலை இருந்தது.
உளவு பலூனின் வடிவம்:
வானில் பறக்கும் அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும். அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது கடினமாக இருந்தது. அதேநேரம், தற்போதுள்ள ஆயுதங்களை கொண்டு அழிக்கப்படும் அளவிற்கு, எளிதான வடிவமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை.
சாதரண பலுனை போன்று ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் காற்றை எடுத்துவிட்டால், பலூன் தானாக கீழே இறங்கி விடுமே என நினைக்கலாம். ஆனால், அந்த பலூன் செய்யப்பட்டுள்ள பொருளின் தடிமனானது ஒரு சாண்ட்வெஜ் அளவிலான தடிமனான பிளாஸ்டிக் பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அதிநவீன ஆயுதங்களை கொண்டு, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தினாலும், அதிலுள்ள அதிக எடையிலான பொருட்கள் கீழே விழுந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
சீனா விளக்கம்:
அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது. அதில், மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நேற்று சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.