Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anna Unversity: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலை., மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு, இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளதாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இருவர், மாணவனை அடித்து விரட்டிவிட்டு மாணவியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மாணவியை தாக்கியவர்கள் பல்கலை. மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் காவல் அதிகாரிகள் புகாரளித்த மாணவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்:
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம். பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

