Anthony Fauci: 'கொரோனா தடுப்பூசியே இந்தியாவின் ஒரே ஆயுதம்'- அமெரிக்க மருத்துவ நிபுணர் ஃபௌசி
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க தடுப்பூசியே நிரந்தர தீர்வு என்று அமெரிக்க மருத்துவ வல்லுநர் ஃபௌசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக டெல்லி, கர்நாடகா,கேரளா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் அந்தோனி ஃபௌசி இந்தியாவின் நிலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"இந்தியாவில் தற்போது ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முதற்கட்டமாக சில நாட்கள் ஊரடங்கு அறிவிக்கவேண்டும். அப்போது தான் வைரஸ் பரவல் சற்று கட்டுப்படுத்த முடியும். எனினும் அது 6மாதங்கள் வரை நீடிக்காமல் இருக்க இந்த காலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே நிரந்தர தீர்வு.
இதனால் இந்தியா அதிகளவில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யவேண்டும். விரைவாக தடுப்பூசியை உற்பத்தி செய்து மக்களுக்கு செலுத்த வேண்டும். இதை தயாரிக்க இந்தியாவிற்கு இருக்கும் அனைத்தும் வசதிகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசியை வாங்கி செலுத்த வேண்டும். அத்துடன் தற்போது நிலவும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படுக்கை தட்டுப்பாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக ராணுவம் உள்ளிட்ட படைகளை இந்த பணியில் ஈடுபடுத்தி மருத்துவ படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். இதற்காக நிறையே இடங்களில் தற்காலிக மருத்துவமனை போன்றவற்றை அமைக்க வேண்டும். அத்துடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு பிற நாடுகளும் உதவ வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. எனினும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மிகவும் குறைந்த அளவில் மட்டுமே 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். எனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை அதிகரித்து அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கு வகையயில் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
தற்போது தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளன. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிர படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.