ஆப்பிள்தான் ஆயுதம்.! அமெரிக்காவுக்கே விபூதி அடிக்கப் பார்த்த மர்ம கும்பல்.!
அமெரிக்க அரசு அதிகாரிகள் 9 பேரின் ஆப்பிள் ஐஃபோன்கள் இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த மென்பொருள் மூலமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு அதிகாரிகள் 9 பேரின் ஆப்பிள் ஐஃபோன்கள் இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த மென்பொருள் மூலமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த ஐஃபோன்கள் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. உகாண்டா முதலான கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகளைக் குறிவைத்து இந்தக் கண்காணிப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
என்.எஸ்.ஓ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகளவில் அமெரிக்க அரசு அதிகாரிகள் குறிவைக்கப்பட்டிருப்பது இது முதல் முறை எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு, பல்வேறு அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைத்து என்.எஸ்.ஓ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் தற்போது அமெரிக்க அரசு அதிகாரிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தியோர் யார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
என்.எஸ்.ஓ நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் தொழில்நுட்பம் இவ்வாறு பயன்படுத்தப்பட்டது தங்களுக்குத் தெரியாது எனவும், கண்காணிக்கப்பட்ட ஐஃபோன்கள் தற்போது கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
`எங்கள் விசாரணையின் மூலம், என்.எஸ்.ஓ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் கண்காணிப்பு நிகழ்ந்திருந்தால், அதனை மேற்கொண்ட பயனாளர் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டு, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ள என்.எஸ்.ஓ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தொடர்ந்து இந்த விவகாரத்தில் என்.எஸ்.ஓ நிறுவனம் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
என்.எஸ்.ஓ நிறுவனம் தங்கள் தொழில்நுட்பத்தை அரசுகளுக்கும், உளவுத்துறைக்கும் மட்டுமே விற்று, நாட்டின் பாதுகாப்புக்காக விற்கப்படுவதாகவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது இல்லை எனவும் கூறியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள உகாண்டா நாட்டின் தூதரகம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குழுவும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர். அமெரிக்க அரசுத் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஓ தொழில்நுட்பம் மூலமாக encrypt செய்யப்பட்டிருக்கும் மெசேஜ்கள், படங்கள் முதலான பிற தனிப்பட்ட தகவல்களை மட்டும் கண்காணிப்பது மட்டுமின்றி, கண்காணிக்கப்படும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக அப்பகுதியில் உள்ளவற்றைக் கண்காணிக்கும் குரல் பதிவுக் கருவியாகவும் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பிற நாடுகளில் பயன்படுத்த இஸ்ரேல் நாட்டின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு, உளவுத்துறை முதலானவற்றைப் பாதுகாக்க இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள குறிப்பில், அமெரிக்க அரசு அதிகாரிகளைக் கண்காணித்தது விதிமீறல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.