Shocking Report: "ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொலை.." ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை..!
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண் அல்லது சிறுமி கொல்லப்படுகிறார் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின.
11 நிமிடத்திற்கு ஒரு கொலை:
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் ஒரு அதிர்ச்சி தரவை பகிர்ந்துள்ளார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல் எனக் கூறிய அவர், இந்த கொடுமையை சமாளிக்கும் தேசிய செயல் திட்டங்களை செயல்படுத்த அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நெருங்கிய நபராலே கொலை:
வரும் நவம்பர் 25ஆம் தேதி, பெண்களுக்கு எதிரான வன்முறையை அழித்தொழிக்கும் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஐநா செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் உலகிலேயே மிகவும் பரவலான மனித உரிமை மீறலாகும். ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும், ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி நெருங்கிய நபராலோ அல்லது குடும்ப உறுப்பினராலோ கொல்லப்படுகிறார்.
கொரோனா பெருந்தொற்று, பொருளாதார கொந்தளிப்பு உள்பட பிற அழுத்தங்கள் காரணமாக மேலும் அதிக எண்ணிக்கையில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் நிகழ்கிறது" என்றார்.
இந்தியாவில் ஷர்த்தா கொலை வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஐநா செயலாளரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
What is #16Days of activism?
— UN Women AsiaPacific (@unwomenasia) November 22, 2022
It is a call to action and a reminder that violence against women and girls is the most pervasive human rights violation worldwide. #PushForward and act now to end violence against women and girls everywhere! pic.twitter.com/SVWMSokB8V
"மனிதகுலத்தில் 50 சதவிகிதம் இருக்கும் பெண்களை குறிவைக்கும் இந்த பாகுபாடு, வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றால் மிக பெரிய விலை கொடிக்க வேண்டியிருக்கிறது. இது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மறுக்கிறது.
மேலும், நமது உலகத்திற்குத் தேவையான சமமான பொருளாதார மீட்பு மற்றும் நிலையான வளர்ச்சியைத் தடுக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை சமகாலத்தில் நிகழவிடாமல் வரலாற்று புத்தகங்களிலேயே நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான நேரம்" என்றார்.