நேரம் நெருங்கிட்டு இருக்கு.. நிறைய பேர் இறந்துடுவாங்க.. பாலஸ்தீனியர்கள் நிலைமை பற்றி ஐநா அதிர்ச்சி!
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,038 குழந்தைகள் உள்பட 7,326 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.
போரால் நிலைகுலைந்த காசா:
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 3,038 குழந்தைகள் உள்பட 7,326 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதுநாள் வரை, வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நேற்று இரவு, வடக்கு காசாவில் நிலத்தின் வழியே தாக்குதலைத் தொடங்கியுள்ளது. காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்திருந்தது.
"விரைவில் பலர் இறப்பார்கள்"
இந்த நிலையில், அடிப்படைத் தேவைகள் இல்லாத காரணத்தால் காசாவில் விரைவில் பலர் இறந்துவிடுவார்கள் என ஐநா அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா தலைமை ஆணையர் பிலிப் லாஸரினி, இதுபற்றி கூறுகையில், "நாம் பேசும் கொண்டிருக்கும் நேரத்தில், காஸாவில் மக்கள் இறந்து வருகிறார்கள்.
குண்டுகள் மற்றும் தாக்குதலால் மட்டும் அவர்கள் இறக்கவில்லை. காசா பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டு வருவதாலும் விரைவில் இன்னும் பலர் உயிரிழக்கப் போகிறார்கள். அடிப்படை வசதிகள்கூட அழிந்து வருகின்றன. மருந்து தீர்ந்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்து வருகிறது. காஸாவின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது" என்றார்.
காசா போர் விவகாரத்தில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல, தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகக் கூறிய ரஷ்யா, சீன நாடுகள், சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேல் போரால் மேற்காசியாவில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஓமன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அல்புசைடியுடன் இன்று இதுபற்றி பேசினார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா காரணமா? பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் பைடன்