UN on Gaza: “காசாவில் பஞ்சம்“; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐ.நா சபை - இஸ்ரேல் தான் காரணம் என குற்றச்சாட்டு
காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் தடைகளால் தான் அங்கு உணவுப் பொருட்கள் செல்ல முடியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் முதன்முறையாக காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அதற்கு காரணம் இஸ்ரேல் தான் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சூழல் என்ன.? பார்க்கலாம்.
ஐ.நா சபை கூறியுள்ளது என்ன.?
காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா சபை அறிவித்துள்ள நிலையில், அங்கு 5,00,000 மக்கள் "பேரழிவு" பட்டினியை எதிர்கொள்வதாக ஐ.நா நிபுணர்கள் கூறியுள்ளனர். பஞ்சம் முற்றிலும் தடுக்கக்கூடியதுதான், ஆனால், இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக" பாலஸ்தீனப் பகுதிக்கு உணவு செல்ல முடியவில்லை என்று ஐ.நா உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறியுள்ளார்.
ஆனால் இஸ்ரேல் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், "காசாவில் பஞ்சம் இல்லை" என்று கூறியுள்ளது.
பாலஸ்தீனப் பகுதியில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதாக ஐ.நா. அமைப்புகள் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், இன்று வெளியான ஒரு அறிக்கையின்படி, "ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி, காசா மாகாணத்தில் பஞ்சம் (IPC கட்டம் 5) நியாயமான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று IPC கூறியுள்ளது. இது காசா பகுதியில் சுமார் 20 சதவீதத்தை உள்ளடக்கியது. செப்டம்பர் மாத இறுதிக்குள் பஞ்சம் டெய்ர் எல்-பலா மற்றும் கான் யூனிஸ் மாகாணங்களுக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாலஸ்தீன பிரதேசத்தின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கும்.
"22 மாத இடைவிடாத மோதலுக்குப் பிறகு, காசா பகுதியில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி, வறுமை மற்றும் மரணம் போன்ற பேரழிவு நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு முயற்சி(IPC) என்பது, வரவிருக்கும் நெருக்கடிகள் குறித்து எச்சரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்களின் கூட்டணியாகும்.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 வரை சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாத இறுதிக்குள் கிட்டத்தட்ட 6,41,000 மக்களாக, அதாவது மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதவிகளை தடுத்துவரும் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்ததன் விளைவாக, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது, மனிதாபிமான மற்றும் வணிக உணவுப் பொருட்களை அணுகுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக அறிக்கை கூறுகிறது.
மார்ச் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் காசாவிலிருந்து உதவிப் பொருட்களை முற்றிலுமாகத் தடை செய்தது. மே மாத இறுதியில், மிகக் குறைந்த அளவுகளில் மட்டுமே உதவிப் பொருட்கள் நுழைய அனுமதித்தது. இதனால், அங்கு உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.
ஜெனீவாவில் பேசிய ஐ.நா.வின் பிளெட்சர், "எங்களை அனுமதித்திருந்தால் நாங்கள் தடுத்திருக்கக்கூடிய ஒரு பஞ்சம் தான் இது. ஆனாலும், இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகளால், எல்லைகளில் உணவு குவிந்து கிடக்கிறது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
காசா பகுதியில் 98 சதவீத விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன என்றும், கால்நடைகள் அழிக்கப்பட்டு, மீன்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் உணவு முறையும் சரிந்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, சுகாதார அமைப்பு கடுமையாக மோசமடைந்துள்ளதாகவும், குறைந்த அளவிலேயே பாதுகாப்பான குடிநீர் மற்றும் போதுமான சுகாதாரம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





















