`ராஜபுத்திரர்கள் மீதான முகலாயர்களின் படுகொலையைப்போல’ - ரஷ்ய படையெடுப்பு குறித்து உக்ரைன் தூதர் பேச்சு..
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா தன்னுடைய நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து பேசிய போது, `ராஜபுத்திரர்கள் மீதான முகலாயர்களின் படுகொலையை’ போல இருப்பதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா இன்று அளித்த நேர்காணலில் தன்னுடைய நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து பேசிய போது, `ராஜபுத்திரர்கள் மீதான முகலாயர்களின் படுகொலையை’ போல இருப்பதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீதான ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் பலியான இந்திய மாணவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வருகை தந்த இகோர் போலிகா, தன்னுடைய அரசு உலகின் அனைத்து முன்னணி தலைவர்களிடம் போர் நிறுத்தத்திற்காக வேண்டி வருவதாகவும், அவர்களுள் ஒருவரான பிரதமர் நரேந்திர மோடியும் தன்னால் இயன்ற வரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைத் தாக்குதல்களைக் கைவிட வலியுறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
`ராஜபுத்திரர்களுக்கு எதிராக முகலாயர்கள் நிகழ்த்திய படுகொலையைப் போல இந்தப் போர் இருக்கிறது. நாங்கள் உலகின் முன்னணி தலைவர்கள், பிரதமர் மோடி உள்பட, அனைவரிடம் புடினை குண்டு வீசுவதைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம்’ என்றும் உக்ரைன் தூதர் இகோர் போலிகா தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பு குறித்து பேசிய இகோர் போலிகா, இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக திட்டம் குறித்து பேசியதாகக் கூறியுள்ளார். `இந்த நிவாரண நிதியை இந்தியா தொடங்கி வைத்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இன்று போலாந்தில் முதல் விமானம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் தரப்பில் இருந்து, உக்ரைன் அதிகளவிலான நிவாரண உதவி பெறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த இறுதியாண்டு மருத்துவக் கல்வி மாணவர் நவீன் சேகரப்பா உக்ரைனின் கார்கிவ் நகரத்தில் இன்று காலை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசிய இகோர் போலிகா, இறந்த மாணவருக்கு இரங்கல் தெரிவித்தார். ராணுவப் பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த ராணுவத் தாக்குதல் தற்போது மக்கள் வாழும் பகுதிகளிலும் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
`உக்ரைனின் கார்கிவ் பகுதியில் குண்டுவீச்சின் போது உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். முன்பு குண்டுவீச்சு என்பது ராணுவம் நிறுத்தப்பட்டிருந்த பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது அது மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பரவியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனின் இந்திய மாணவர் உயிரிழந்தது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் தூதர்களிடம் பேசி கார்கிவ் முதலான போர் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்குப் பாதுகாப்பான வெளியேற்றம் அறிவிக்குமாறு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள், வெளியுறவுத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உக்ரைனின் இந்திய மாணவ்ர் உயிரிழந்தது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.