Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டிலே அதிரடி ரெய்டு..! சிக்கிய முக்கிய ஆவணங்கள், பறிபோகிறதா பதவி?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் நடந்து வரும் அதிரடி சோதனையால் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெலி வில்மிங்டனில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டில், நீதித்துறை புலனாய்வு அதிகாரிகள், எஃப்.பி.ஐ. அதிகாரிகளின் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர். துணை அதிபராக இருந்த போது ரகசிய ஆவனங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில் நடந்த இந்த சோதனை 13 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துள்ளது. அப்போது பைடனின் வீட்டில் இருந்து அரை டஜனுக்கும் அதிகமான ஆவணங்கள், விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிபரின் தனிப்பட்ட வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சோதனையின்போது, அதிபர் பைடனோ அவரது மனைவியோ, அந்த வீட்டில் இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதிபர் பைடனின் வீட்டில் நடந்த இந்த சோதனை, அமெரிக்க அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கைப்பற்றப்பட்ட சில வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பைடன் அமெரிக்காவின் செனட்டாக இருந்த காலகட்டத்தை சேர்ந்தது என்றும், மற்றவை கடந்த 2009 முதல் 2017ம் ஆண்டு கால கட்டங்களில் ஒபாமவின் ஆட்சியின் போது, பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தை சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக இருந்தபோது அவர் கைப்பட எழுதிய சில ஆவணங்களும் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன. நீதித்துறை புலனாய்வு அதிகாரிகள் தனது வீட்டில் நடத்த சோதனை நடத்த, அதிபர் பைடன் முழு அனுமதி அளித்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள பைடனின் தனிப்பட்ட அலுவலகத்தில், கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற சோதனையின்போதும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.