Twitter : வந்துட்டேன்னு சொல்லு.. வாக்கெடுப்பு நடத்தி டிரம்பை மீண்டும் ட்விட்டருக்கு கொண்டுவந்த எலான் மஸ்க்
Twitter : ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Twitter : ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பு.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில், டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் முன்னதாக மாஸ்டடோன், கூ உள்ளிட்ட பிற மைக்ரோ ப்ளாகிங் தளங்கள், சமூக வலைதள செயலிகளுக்கு மாறி வந்தனர். 8 டாலர்கள் வரை செலுத்தி எவரும் வெரிஃபைட் அக்கவுண்ட் பெறலாம் எனும் திட்டம் அறிவிப்பட்ட நிலையில், அதன்படி இந்தியாவில் ப்ளூ டிக் வாங்குவதற்கு மாதம் ரூ.719 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மஸ்கின் இந்த அறிவிப்பு கடும் கண்டனங்களையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி இந்த ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளது ஒரு சாரரை அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தாலும், மற்றொரு தரப்பினர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும் மகிழ்ச்சி தெரிவித்தும் வருகின்றனர்.
டிரம்பின் ட்விட்டர்
அமெரிக்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி சார்பில் போட்யிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக டிரம்பின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கிடையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். அந்த போராட்டங்களின் போது சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் 8 கோடி பேரால் பின்தொடரப்பட்டு வந்த டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.
இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் டிரம்பின் கணக்குகள் முடக்கப்பட்டன. இதை அடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவைகளுக்கு போட்டியாக டொனால்டு டிரம்ப் புதிதாக 'Truth' என்னும் புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதும், டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பது குறித்து வாக்கெடுப்பு கேள்வியை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Reinstate former President Trump
— Elon Musk (@elonmusk) November 19, 2022
இதில், 51.8 சதவீதம் பேர், டிரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு வரவேண்டும் என அவருக்கு ஆதரவாகப் பதில் அளித்துள்ளனர். மேலும் 48.2 சதவீதம் பேர் டிரம்பை ட்விட்டரில் சேர்க்க எதிர்த்து கூறி வாக்களித்தனர்.
The people have spoken.
— Elon Musk (@elonmusk) November 20, 2022
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv
இதனை அடுத்து டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு ட்விட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.