அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்கள்.. வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த அபூர்வ நிகழ்வு!
அமெரிக்காவில் பெண் ஒருவர் 15 நிமிட இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். இந்த இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்து இருப்பதால் உலகம் முழுவதும் இணையத்தில் பிரபலங்கள் ஆகியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 15 நிமிட இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். இதில் என்ன புதுமை என நீங்கள் கேட்பது எங்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆண்டுகளில், வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு நாள்களில் பிறந்துள்ளதே இந்தக் குழந்தைகளுக்குத் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் அளிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நேடிவிடாட் மருத்துவ நிலையத்தில் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்த செய்தியை மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த பாத்திமா மேட்ரிகல் என்ற பெண் அய்லின் ட்ரூஜிலோ, அல்ஃப்ரெடோ ட்ரூஜிலோ என்ற இரட்டைக் குழந்தைகளை 15 நிமிட இடைவெளியில் பெற்றுள்ளார். இந்த இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்து இருப்பதால் ஒரே நாளில் உலகம் முழுவதும் இணையத்தில் பிரபலங்கள் ஆகியுள்ளனர்.
நேடிவிடாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள பதிவில், `அய்லின் ட்ரூஜிலோ என்ற பெண் குழந்தை கடந்த ஜனவரி 1 அன்று சரியாக நள்ளிரவில் பிறந்து, நேடிவிடாட் மருத்துவமனையிலும், மோண்டெரி பகுதியிலும் 2022ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். எனினும், அவரது சகோதரர் அல்ஃப்ரெடோ ட்ரூஜிலோ கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 31 அன்றின் நள்ளிரவு 11.45 மணிக்குப் பிறந்துள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
`இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்ற போதும், வெவ்வேறு பிறந்த நாள்களைக் கொண்டிருப்பதால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இருவரும் நள்ளிரவில் பிறந்து எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றனர்’ என்று இந்த இரட்டைக் குழந்தைகளின் தாயான பாத்திமா பேட்டியளித்துள்ளார்.
இத்தகைய தனித்துவமான பிறந்த நாள்களைக் கொண்டிருக்கும் இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அன்பும், வாழ்த்து மழையும் இணையத்தில் குவிந்து வருகின்றன. சிலர் இந்த நிகழ்வின் அற்புதத்தைப் பாராட்டியுள்ளனர்; வேறு சிலர் இந்த இரட்டைக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவார்கள் என்று தற்போதே சிலாகித்து வருகின்றனர்.
நேடிவிடாட் மருத்துவமனையின் குடும்ப நல மருத்துவர் அனா அப்ரில் அரியாஸ் இந்த அபூர்வ நிகழ்வு குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், `எனது தொழில்முறை அனுபவத்தில் இந்தப் பிரசவமும், குழந்தை பிறப்பும் என் நினைவில் இருந்து அகலாது. 2021ஆம் ஆண்டிலும், 2022ஆம் ஆண்டிலும் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பாதுகாப்பாக பிரசவிக்க உதவி செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தாண்டை இதுபோன்ற மறக்க முடியாத நிகழ்வோடு தொடங்குவது கொண்டாட்ட மனநிலையைத் தருகிறது’ எனக் கூறியுள்ளார்.