Hijab Law : அராஜகம்.. ஹிஜாப் போடலன்னா நடிக்கக்கூடாது! ஈரானில் நடிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை
ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டம் வெடித்ததில் இருந்தே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு பெண்கள் மறுத்த வண்ணம் உள்ளனர்.
ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறியதாகக் கூறி, மாஷா அமினி என்பவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்தவர் மாஷா அமினி. ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி, ஈரான் நாட்டின் அறநெறி காவல்துறை அதிகாரிகள், இவரை கொடூரமாக தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
ஈரானில் பெண்களுக்கு எதிராக கடும் விதிகள்:
காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று, மாஷாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வலிதாங்க முடியாத மாஷா அமினி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று சோதனை மேற்கொண்டதில் மருத்துவர்கள் மாஷா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் மாஷா உயிரிழந்தார்.
இந்த சம்பவம், அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், பெண்கள் தலைமையில் நடந்த அறவழி போராட்டத்தை கலவரமாக ஈரான் அரசு முத்திரை குத்தி வந்தது.
ஈரான் நடிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடை:
இந்த நிலையில், ஆடை விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, 12 நடிகைகள் நடிக்க ஈரான் அரசு தடை விதித்துள்ளது. தாரனே அலிதூஸ்டி, கட்டயோன் ரியாஹி, ஃபதேமே முகமது ஆரியா உள்ளிட்ட நடிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டின் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சர் முகமது மெஹ்தி எஸ்மாலி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சட்டத்தை பின்பற்றாதவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என அவர் கூறினார். இதில், அலிதூஸ்டி மற்றும் ரியாஹி ஆகியோர், ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
ஹிஜாப் விதிகளை மீறினால் சிறை தண்டனையா?
கடந்த ஆண்டு, ஹிஜாப் விவகாரம் தொடர்பான போராட்டம் வெடித்ததில் இருந்தே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை அந்நாட்டு பெண்கள் மறுத்த வண்ணம் உள்ளனர். கழுத்து மற்றும் தலையை மறைக்கும் வகையில் உடைகளை அணிவது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு பெண்களுக்கு கட்டாயமாக இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக, ஹிஜாப் விதிகளை மீறும் பெண்களுக்கு எதிராக ஈரான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக தண்டனையை கடுமையாக்க ஈரான் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர். அதன்படி, ஹிஜாப் விதிகளை மீறும் பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: "எந்த உலகுத்தல வாழுறீங்க" பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐநா தலைவர்.. கொந்தளித்த இஸ்ரேல்