Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அதில் சமீபத்திய நகர்வாக, எண்ணெய் வயல்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு ட்ரம்ப் கெடுவும், எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டில் தங்கள் நாடு உருவாக்கிய எண்ணெய் வயல்களை ஒப்படைக்குமாறு கெடு விதித்துள்ளார். வெனிசுலாவை எச்சரிக்கும் வகையில் ட்ரம்ப் என்னென்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
வெனிசுலாவுடன் அமெரிக்காவிற்கு என்ன பிரச்னை.?
வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். அதோடு நிற்காமல், போதைப் பொருள் கடத்தி வரும் கப்பல்களையும் அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. அதோடு கூடுதலாக, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகளையும் அமெரிக்கா விதித்தது.
இது போதாதென்று, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்று கூறி, அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இப்படி, வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
எண்ணெய் வயல்களை ஒப்படைக்க வேண்டும் - ட்ரம்ப் எச்சரிக்கை
இந்த சூழ்நிலையில், வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். அதுவரை, வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் அரசு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக மாறி வருவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். எண்ணெய் வர்த்தகம் மூலம் நிதி திரட்டி, பயங்கரவாதம், போதைப் பொருள், மனிதக் கடத்தல் போன்ற செயல்களில் வெனிசுலா ஈடுபடுவதாக அவர் சாடியுள்ளார். அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதுவரை, வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிகளவிலான கடற்படையினரால் வெனிசுலா முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதோடு, இதுவரை அவர்கள் பார்த்திடாத வகையில் இந்த விவகாரம் இன்னும் விரிவடையும், எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.




















