Trump Hamas: “காசா மக்கள கொல்றத நிறுத்தலன்னா வேற வழியே இல்ல“; ஹமாஸை பயங்கரமாக எச்சரித்த ட்ரம்ப்
காசாவில் உள்ள மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால் வேறு வழியே இல்லை எனக் கூறி, ஹமாஸ் அமைப்பிற்கு ட்ரம்ப் பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார்.? பார்க்கலாம்.

காசாவில் ட்ரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டம் அமலில் உள்ள நிலையில், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்களிடையே மோதல் நிகழ்ந்துவருகிறது. இந்நிலையில், காசா மக்களை கொல்வதை ஹமாஸ் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அவர்களுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை தனது ட்ரூத் சோசியல பக்கம் மூலமாக விடுத்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
“கொல்வதை நீங்கள் நிறுத்தாவிட்டால் உங்களை நாங்கள் கொல்ல வேண்டியிருக்கும்“
இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி நடக்காமல், காசாவில் உள்ள மக்களை கொல்வதை ஹமாஸ் தொடர்ந்தால், உள்ளே சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்று எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறினால், தான் கூறும்போது இஸ்ரேல் படைகள் காசாவிற்குள் சென்று தாக்குதல் நடத்தலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் தான் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அது குறித்து வெளியான செய்திகளின்படி, உயிருள்ள மற்றும் இறந்த பிணைக் கைதிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஹமாஸ் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று இஸ்ரேல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், தான் கூறும்போது இஸ்ரேல் தனது படைகளை காசாவிற்குள் அனுப்பி ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ட்ரம்ப் கூறியதாக தெரிகிறது. ஹமாசுடன் என்ன நடக்கிறது.? அது விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தாக தகவல் வெளியானது.
கையெழுத்தான முதற்கட்ட அமைதி ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதித் திட்டம் குறித்து மத்தியஸ்தர்கள் முன்னிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரத்தில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில், முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதாக ட்ரம்ப் அறிவித்தார்.
ஆனாலும், பேச்சுவார்த்தையின்போதே, இஸ்ரேலை நம்ப மறுத்த ஹமாஸ், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்கும் என்ற உத்தரவாதத்தை ட்ரம்ப்பிடம் கேட்டது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானதாக ட்ரம்ப் பின்னர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தொடங்கியது. அதேபோல், இஸ்ரேலும் பாலஸ்தீனிய பிணைக் கைதிகளை விடுவிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பால் 20 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அதில் ஒருவருடைய உடல் இஸ்ரேல் பிணைக் கைதிக்கு சொந்தமானது அல்ல என தெரிவித்த இஸ்ரேல், ஹமாஸ் ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது.
இதையடுத்து தான், ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும், ஹமாஸ் அமைப்பினர் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்போது ட்ரம்ப் ஹமாஸ் அமைப்பினரை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.





















