INDIA US Trade: நண்பேண்டா.. மோடியின் முதுகில் குத்தும் ட்ரம்ப்? உறவுக்கு கை கொடுத்து, துரோகத்திற்கு வலை?
INDIA US Trade: இந்தியா உடனான உறவை ஒருபக்கம் பாராட்டியபடியே, உலக நாடுகள் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கும் இரட்டை நிலைப்பாட்டு பணிகளை அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.

INDIA US Trade: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க, ஜி7 நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”ஜி7 நாடுகளுக்கு ட்ரம்ப் அழுத்தம்”
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குதற்காக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. உக்ரைன் மீதான புதினின் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையாக இதனை குறிப்பிட்டு வருகிறார். இந்நிலையில் தான், இந்தியா மற்றும் சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்க, ஜி7 நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக, இங்கிலாந்தைச் சேர்ந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் நிதியமைச்சர்கள், காணொலி வாயிலான ஆலோசனையில் இன்று பங்கேற்க உள்ளனர். அதில், இந்தியா மற்றும் சீனா மீது 50 முதல் 100 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா வலியுறுத்த உள்ளதாம்.
”நடவடிக்கைகள் கன்ஃபார்ம்”
ஜி7 அமைப்பிற்கு தற்போது தலைமை வகிக்கும் கனடாவானது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்தியா மற்றும் ரஷ்யா மீது கூடுதல் வரிகளை விதிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இந்தியா மீது, கூடுதல் வரிகளை விதிப்பதன் மூலம் புதினை போர் நிறுத்த பேச்சுவார்த்தை இணங்கச் செய்ய முடியும் என ட்ரம்ப் கருதுகிறாராம்.
”இந்தியா உடனான உறவு என்பது”..
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு, ட்ரம்பின் வரியால் பதற்றத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று அமெரிக்கா கொண்டுள்ள உலகின் சிறந்த உறவுகளில் ஒன்றாக இந்தியா உடனான நட்பு இருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். டெல்லிக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட செர்ஜியோ கோருக்கான செனட் உறுதிப்படுத்தல் விசாரணையின் போது பேசிய ரூபியோ, “நான் இந்த பதவிக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டபோதே சொன்னேன்... 21 ஆம் நூற்றாண்டின் கதை இந்தோ-பசிபிக் பகுதியில் எழுதப்படப் போகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள போர் கட்டளையின் பெயரை நாம் மாற்றியிருப்பது மிகவும் முக்கியமானது. இந்தியா அதன் மையத்தில் உள்ளது. உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதையும், பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதையும் உள்ளடக்கிய சில முக்கியமான பிரச்சினைகள் எங்களிடம் உள்ளன. இந்தியா-அமெரிக்க உறவுகள் அசாதாரண மாற்றத்தின் காலகட்டத்தில் உள்ளன” என பாராட்டி பேசியுள்ளார்.
”இந்தியாவை அடிக்கும் ட்ரம்ப்”
ரஷ்யாவிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் ரஷ்யாவை விடுத்து, இந்தியா மீது மட்டும் அமெரிக்கா அதிக வரி விதித்தது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, இந்தியாவின் நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், திடீரென எனது நண்பர் மோடியை விரைவில் சந்தித்து பேசி இருக்கிறேன் என அறிவித்தார். இதனால் இந்த பிரச்னைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பிற்கு பிறகே, இந்தியா மீது 100 சதவிகிதம் வரி விதிக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி7 நாடுகளுக்கு ட்ரம்ப் அழுத்தம் அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உண்மையில் ட்ரம்ப் இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? என்பதில் குழப்பம் நிலவுகிறது.




















