Trump on Paracetamol: கர்ப்பிணிப் பெண்கள் பாரசிட்டமால் எடுக்கக் கூடாதா.? ஆட்டிசம் ஆபத்து உள்ளதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
கர்ப்பிணிப் பெண்கள் டைலனால் எனப்படும் பாரசிட்டமால் மருந்தை தவிர்க்க வேண்டும் எனவும், அது ஆட்டிசத்துடன் தொடர்புடையது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலம்(2017-21) மற்றும் இரண்டாவது முறையாக பதவியேற்ற 8 மாதங்களில், பொது சுகாதாரம் குறித்து பல சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாமல் மருத்துவ ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார். இதில் COVID-19-க்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஒரு 'சிகிச்சையாக' ஊக்குவிப்பதும் அடங்கும். இந்நிலையில், தற்போது கர்ப்பிணிகள் டைலனால் எனப்படும் பாரசிட்டமால் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்றும், அது ஆட்டிசத்துடன் தொடர்புடையது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரசிட்டமால் குறித்த ட்ரம்ப் கூறியது என்ன.?
இன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொர்புபடுத்தி பேசினார்.
தான் ஒரு மருத்துவர் அல்ல என்று கூறிய அவர், ஆனால் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜுனியர் தலைமையிலான பல மாத விசாரணைகளுக்குப் பின், கர்ப்பிணிப் பெண்கள் அசிட்டோமெனோஃபின் பயன்பாட்டை குறைக்க வேண்டு என்றும் அறிவித்தார்.
“ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கிறது“
மேலும், இது பொதுவாக அமெரிக்காவில் டைலனால் என்றும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பாரசிட்டமால் என்றும் விற்கப்படுவதாக கூறினார். அதோடு, கர்ப்ப காலத்தில் இந்த மருந்தை பயன்படத்துவது, குழந்தைகளுக்கு ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த அறிவுரை, கர்ப்ப காலத்தில் அசிட்டோமெனோஃபின் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நீண்ட காலமாக கூறிவரும் அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்லூரிக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தடுப்பூசிகள் குறித்து ட்ரம்ப் அறிவுரை
இந்நிலையில், இளம் குழந்தைகளுக்கு எப்போது வலி நிவாரணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் ட்ரம்ப் பேசினார். அதிலும், தடுப்பூசிகளை கேள்விக்குட்படுத்துவதில் பெயர் பெற்ற ராபர்ட் எஃப் கென்னடி ஜுனியருக்கு ஆருகிலேயே நின்றுகொண்டு, ட்ரம்ப் தடுப்பூசிகளை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை.
இருந்தாலும், சில தடுப்பூசிகளை தாமதப்படுத்த வேண்டும் என்றும், கூட்டு தடுப்பூசிகளை தனித்தனி தடுப்பூசிகளாக வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும், டைலனால் எடுத்துக்கொள்வத நல்லதல்ல. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கர்ப்பமாக இருக்கும்போது, இந்த மருந்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து நாங்கள் மருத்துவர்களிடம் பேச வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, டைலனால் எடுத்துக்கொள்ளாதீர்கள் என்ற அறிவுறுத்தலை ட்ரம்ப் பல முறை திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
கர்ப்பிணிப் பெண்கள் கடினமாக இருக்க வேண்டும் என்றும், மிகவும் அதிக காய்ச்சல் இருந்தால் மட்டுமே இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், தடுப்பூசி மூலப்பொருட்கள் அல்லது சரியான நேரத்தில் தடுப்பூசிகள் கொடுப்பது, அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற பழைய கூற்றுக்களை ட்ரம்ப் மீண்டும் சுட்டிக்காட்டினார். ஆனாலும், இந்த கூற்றுகளுக்கு அவர் மருத்துவ ஆதாரங்களை ட்ரம்ப் வழங்கவில்லை.
எனினும், அசிட்டோமெனோஃபின், ஆட்டிசத்திற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மருத்துவர்களுக்கு தெரிவிக்கத் தொடங்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.





















