Trump China India: சீனாவுக்கு வரி குறைப்பு; இந்தியவுக்கு பாராட்டு; தென் கொரியாவில் ட்ரம்ப் செய்தது என்ன.?
ஆசிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று தென் கொரியாவில் நடந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றதுடன், சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்நாட்டிற்கான வரியை குறைத்துள்ளார்.

ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தென்கொரியாவின் கியோங்ஜுவில் நடந்த ஆசிய-பசிபிப் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று பூசான் நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வரி குறைப்பு உள்பட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், புறப்படும் போது, இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு 10% வரியை குறைத்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர், கடைசியாக 2019-ம் ஆண்டு சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, 6 ஆண்டுகளுக்குப் பின், தென் கொரியாவில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தனது ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக, தென் கொரியாவின் பூசான் நகரில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேற்று சந்தித்து, சமார் 100 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அப்போது, சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அரிய கனிமங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஓராண்டிற்கு நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியில் மாற்றம் செய்யவும் சீனா முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சில பொருட்கள் மீதான தற்காலிக வரி விலக்கு நீட்டிக்கப்படும் என்றும், பென்டானில் மருந்து பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மீதான வரியை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோல், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதலை சீனா மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட வேளாண் விரிவாக்கத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் குறிப்பிட்ட வணிகப் பிரச்னைகளை தீர்ப்பது உள்ளிட்டவற்றில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் கொள்முதல் - இந்தியாவை பாராட்டிய ட்ரம்ப்
சீன அதிபருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, அமெரிக்கா புறப்பட்ட அதிபர் ட்ரம்ப், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீனா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக தெரிவித்த அவர், அது தான் சீனாவின் பெரும்பான்மையான தேவையை பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்.
அதே சமயம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார் ட்ரம்ப்.
மேலும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை என்றும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றியே விவாதித்ததாகவும் ட்ரம்ப் கூறினார்.
ஏற்கனவே, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்தாக கூறிய ட்ரம்ப், தற்போது எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருப்பதாக பாராட்டியுள்ளார். இதற்கு மத்திய அரசு என்ன கூறப் போகிறது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.





















