சீனாவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பிரபல அணு விஞ்ஞானி..!
சீனாவில் பிரபல அணு விஞ்ஞானியும் ஹார்பின் பொறியியல் பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவருமான ஜாங் ஜீஜியான் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கவனிக்கத்தக்க அணு விஞ்ஞானியும், ஹார்பின் பொறியியல் பல்கலை கழகத்தின் துணைத்தலைவருமான ஜாங் ஜீஜியான் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இவரது இறப்பு குறித்து செளத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்பில் , “ கடந்த ஜூன் 17 ஆம் தேதி காலை 9.34 மணி அளவில்கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து விஞ்ஞானி உயிரிழந்தார். விஞ்ஞானியின் மரணத்திற்கு ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்திய பலகலை கழகம் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இறப்பு குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விஞ்ஞானியின் பெயர் கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைகழகத்தின் இணையதளத்தின் தலைமை பட்டியலில் இடம்பெற்றது.
ஹார்பின் பொறியியல் பல்கலைகழகத்தின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்த ஜாங் ஜீஜியான் சீனாவின் அணு சங்கத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றி வந்தார். இதுமட்டுமன்றி பல்கலைகழகத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழுவின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கியான் சாங்கியாங் தொழில்நுட்ப விருது (Qian Sanqiang Technology Award) அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அணுசக்தி உருவகப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியதற்காக அவரை சீனாவின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று சீனா தேசிய அணுசக்தி கழகம் பாராட்டியது.
கடந்த மே மாதம் அவரின் சிறப்பான கண்டுபிடிப்புகளுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், ஹார்பின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலி பொறியியல் ( நீருக்கு அடியில் செயல்படுத்துதல்)பிரிவின் டீன் யின் ஜிங்வேவை (Yin Jingwei) பல்கலைகழகத்தின் புதிய துணை தலைவராக நியமிப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சீன ராணுவத்தின் நெருங்கிய தொடர்பில் உள்ள இரண்டு பல்கலை கழகங்களில் இதுவும் ஒன்று. இந்தியா சீனா இடையில் தொழில் நுட்ப ரீதியான பதட்டம் நிலவிய வேளையில், அமெரிக்கா உருவாக்கிய கணினி மென்பொருள் தளத்தை பல்கலைக்கழகம் உபயோகிக்க கடந்த ஜூன் மாதம் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், அமெரிக்க வர்த்தகத்துறை பல்கலைகழகத்தையும் ஹர்பின் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலாஜியையும் "entity” லிஸ்ட்லில் இணைத்தது குறிப்பிடத்தக்கது.