ஆபத்தான ஆள்! 3.5 கிமீ தூரத்திலும் குறி தப்பாமல் சுடும் வீரர்! உக்ரைனுக்காக களமிறங்கும் வாலி!
ரஷ்யாவுக்கு எதிராக நடைபெறும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் உலகின் சிறந்த துப்பாக்கிச்சூடு வீரர்.
![ஆபத்தான ஆள்! 3.5 கிமீ தூரத்திலும் குறி தப்பாமல் சுடும் வீரர்! உக்ரைனுக்காக களமிறங்கும் வாலி! The world's best sniper has rallied in support of Ukraine in the ongoing war against Russia ஆபத்தான ஆள்! 3.5 கிமீ தூரத்திலும் குறி தப்பாமல் சுடும் வீரர்! உக்ரைனுக்காக களமிறங்கும் வாலி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/13/03e891e52225107307fb788d32b4b13b_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரஷ்யாவுக்கு எதிராக நடைபெறும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் உலகின் சிறந்த துப்பாக்கிச்சூடு வீரர்.
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி முதல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அளவில் ரஷ்யாவை விடமிகச்சிறிய நாடான உக்ரைன் மற்ற நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து வருகிறது. உக்ரைனின் பதிலடி தாக்குதலில் இதுவரை 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெளிநாட்டினரும் பங்கேற்கலாம் என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி அழைப்புவிடுத்திருந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உலகின் தலைசிறந்த துப்பாக்கிச்சூடு வீரராகக் கருதப்படும் ‘வாலி’ உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். 40வயதான கணினி விஞ்ஞானியான இவர் கனடாவின் எலைட் ஸ்னைப்பர் பிரிவில் பணியாற்றியிருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இவர் களமிறங்கியிருக்கிறார். அதன்பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிரியா மற்றும் ஈராக்கில் பணியாற்றியிருக்கிறார். ஒரு சாதாரண துப்பாக்கிச்சுடும் வீரர் ஒருநாளைக்கு 5 முதல் 6 பேரை கொல்வார். கொஞ்சம் திறமையானவர் ஒரு நாளைக்கு 7 முதல் 10 பேரை கொல்வார். ஆனால் வாலியோ, ஒரு நாளைக்கு 40 பேரை கொல்லும் அளவிற்கு திறன் கொண்டவர். உலகில் அதிகபட்ச தூரத்தில் இருந்து சுட்ட சாதனையை படைத்தவர் தான் இந்த வாலி. கடந்த 2017ம் ஆண்டு ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஒரு தீவிரவாதியை இவர் சுட்டு வீழ்த்தியபோது உலகமே அதிர்ந்தது. அதற்கு முன்பு தாலிபான்களுக்கு எதிரான போரில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் இருந்த தாலிபான் தீவிரவாதி சுட்டுவீழ்த்தபட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்த நிலையில் 3.5 கி.மீ தொலைவில் இருந்த தீவிரவாதியை 10 நொடிகளுக்குள் சுட்டு வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் இந்த வாலி. வாலி என்ற பெயருக்கு அரபு மொழியில் பாதுகாப்பாளன் என்று பொருள். ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது இவருக்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது.
வாலிக்கு ஒரு மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். அந்த குழந்தைக்கு அடுத்த வாரம் தான் ஒரு வயதாகவிருக்கும் நிலையில் அதைக் கொண்டாடாமல் போரில் பங்கேற்க உக்ரைனுக்கு வந்துவிட்டார் ‘வாலி’. அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, என் நண்பர் ஒருவர் என்னை அழைத்து உக்ரைனுக்கு நல்ல துப்பாக்கிச்சூடு வீரர் தேவைப்படுகிறார் என்று கூறினார். இந்த அழைப்பு, தீயணைப்பு வீரர் கேட்கும் மணியோசைக்கு ஒப்பானது. அதனால் உடனடியாக கிளம்பிவிட்டேன். என் மகனுக்கு ஒரு வயதாவதற்குள் போருக்கு கிளம்புவது என்பதை கேட்கும்போது கொஞ்சம் மோசமாகத் தோன்றும், ஆனால் உக்ரைனில் நடைபெறும் அழிவைப் பார்க்கும் போது, பாதிக்கப்படுபவர்களை, அபாயத்தில் இருப்பவர்களைப் பார்க்கும்போது அதில் என் மகனைப் பார்க்கிறேன்.
உடைந்து கிடக்கும் கட்டிடங்களைப் பார்க்கும்போது அதில் பலரது பென்சன் நிதி உடைந்து எரிவது போன்று பார்க்கிறேன். அதனால் தான் ஒரு மனிதாபிமான அடிப்படையில் அங்குச் செல்கிறேன் என்று கூறியுள்ளார் வாலி.இவர் மட்டுமல்லாமல், இவருடன் சேர்ந்து இன்னும் மூன்று கனட ராணுவ வீரர்களும் உக்ரைனுக்குச் சென்றிருக்கின்றனர். இதற்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கடந்த 2015ம் ஆண்டு ஈராக்குக்கு தானாகவே தன்னார்வலராக கலந்து கொண்டு போரில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)