கொரோனா மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை - இங்கிலாந்து அரசு அறிவிப்பு
இங்கிலாந்தில் கோவிட் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என மே 31-ஆம் தேதியன்று அறிவித்துள்ள நிலையில் அதற்கு தடுப்பூசிகள் கைகொடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து முழுவதும் கொரோனா தொற்றால் மரணங்கள் ஏதும் நிகழவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் தினசரி கோவிட் உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகி வந்தன. 2020 ஜூலை மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வந்தது. தொற்றின் உச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தையும் அந்நாட்டு அரசு அறிவித்தது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அந்நாட்டில் 127, 782 பேர் வரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்திருப்பதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் கடந்த 28 நாட்களில் இங்கிலாந்தில் உள்ள கொரோனா உயிரிழப்புகள் பதிவாகாத நிலையில் 3,165 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கை கொடுக்கும் தடுப்பூசிகள் இங்கிலாந்தில் கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதில் தடுப்பூசிகள் பெரும்பங்கு வகிப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா மரணங்களை தடுப்பதில் தடுப்பூசிகள் தெளிவாக கைகொடுப்பதாகவும் அனைவரையும் பாதுகாப்பதாகவும் கூறுகிறார் சுகாதாரத்துறை அலுவலர் ஹன்காக். இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வருவதாக கூறுகிறார். உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் உங்களின் அன்பானவர்களையும் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என இங்கிலாந்து சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் 39, 477, 158 பேருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள இங்கிலாந்து சுகாதார அமைப்பு. 18 வயது மேற்பட்டவர்களில் 3 பேரில் ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொடர்ந்து ஏராளமானோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி அடைந்து வருவதாக இங்கிலாந்து அரசுக்கு ஆலோசனை தரும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கோவிட் தொற்று உடனான போர் இன்னும் முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கைக்கு மத்தியில் இங்கிலாந்தின் சில பகுதிகளில் தளர்வுகளை அளிக்கவும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது பலருக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு பதிவாகாமல் இருப்பது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. இங்கிலாந்தில் கோவிட் இறப்பு விகிதம் குறைந்தாலும் பரவல் விகிதம் குறையாததால் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் முடியவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை வார தொடக்கத்திலும் வார இறுதிநாட்களிலும் இறப்பு விகிதங்கள் குறைவாக பதிவாவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.