Thailand Bus Fire: பற்றி எரிந்த பள்ளி பேருந்து..! மழலைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு - சரணடைந்த ஓட்டுநர் செய்த தவறு?
Thailand Bus Fire: தாய்லாந்தில் பள்ளி பேருந்து எரிந்து மாணவர்கள் உட்பட, 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Thailand Bus Fire: தாய்லாந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கல்வி சுற்றுலா சென்றபோது இந்த கோரவிபத்து நிகழ்ந்தது.
ஓட்டுனர் போலீசில் சரண்:
தாய்லாந்தில் நேற்று பள்ளி மாணவர்கள் பயணித்த பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மாணவர்கள் உட்பட 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்ற ஓட்டுனர் தாமாக முன்வந்து போலீசாரிடம் சரணடைந்துள்ளார். விபத்து நடந்தபோது அச்சம் காரணமாகவே, சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளார்.
Summary #BusFire #ไฟไหม้รถบัส
— Lost in the Mook🐣🇹🇭 (@the_moooook) October 1, 2024
- Bus from a School in Uthai Thani #Thailand caught fire on Vibhavadi Rangsit Road
- 42 students and a teacher were onboard, with 19 evacuated
- 22 children in kindergarten to grade 4 lost their lives in the incident pic.twitter.com/pxoLbMycf0
ஓட்டுனர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
கவனமின்றி பேருந்தை ஓட்டி மரணத்தையும் காயத்தையும் விளைவித்தததாகவும், பேருந்தை நிறுத்தி உதவி செய்யத் தவறியதாகவும், சம்பவம் குறித்துப் புகார் அளிக்காமல் இருந்ததாகவும் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுனர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிறுவனம் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
தாய்லாந்தின் மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிமாணவர்கள் நேற்று பேருந்தில் கல்விச் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அதில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அடங்குவர். அதன்படி, பேருந்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 44 பேர் இருந்தனர். இந்நிலையில் கு கோட்நகரில் சென்று கொண்டிருந்த போது, உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து தீப்பற்றியது. பேருந்தில் தீ மளமளவென பரவி, மொத்தமாக எரிய தொடங்கியுள்ளது. இதை கண்டதும் ஓட்டுனர் பேருந்தில் இருந்து எகிறி குதித்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளார். தொடர்ந்து, பேருந்து மொத்தமாக எரிந்து நாசமானதில், 20 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியான மாணவர்கள் மழலை வகுப்பு தொடங்கி 4ம் வகுப்பை வரையிலான வயதை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 16 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.