"ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஓட்டா..? ஊருக்குள்ளே வராதே..! திரும்பிப்போ..!" கொழும்பில் போராட்டம்..!
ரணில் விக்கிரமிங்கவிற்கு வாக்களித்தால் ஊருக்குள் திரும்ப வரக்கூடாது என்று இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டு அதிபர் நாட்டை விட்டு தப்பியோடியதுடன் தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அந்த நாட்டில் புதிய அதிபர் யார் என்பதை தீ்ரமானிக்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க உள்பட மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் ரணில் விக்கிரமசிங்க அதிபராக போட்டியிடுவதற்கு அந்த நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போதைய அதிபராக பொறுப்பு வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை நிலையத்தின் முன்பாக பெரியளவில் போராட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று குரல் எழுப்பப்பட்டது. மேலும், ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என்றும் இந்த போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது. ரணில் விக்கரமசிங்க மீதும் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான பணிகள் இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கூடாது என தெரிவித்து இன்று அந்த நாட்டில் போராட்டம் நடைபெற்றுள்ளது. ராஜபக்சர்களை காப்பாற்றும் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம், ரணிலுக்கு வாக்களித்து விட்டு ஊருக்கு வர வேண்டாம் என கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருட்களின் விலை ஏறியதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை கண்டித்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை கைப்பற்றினர். பிரதமராக பதவி வகித்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க : Dullas Alahapperuma: இலங்கையின் புதிய ஜனாதிபதி டலஸ் அழகப்பெரும? கடைசி நேர அதிரடி திருப்பம்!
மேலும் படிக்க : பின்வாங்கிய சஜித்! மும்முனை போட்டியாக மாறிய இலங்கை அதிபர் தேர்தல்...வெற்றி யாருக்கு?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்