வீண் செலவுகளை தவிர்த்திடுங்க.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தல்
இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதலில் தீர்வு கண்டே தீருவேன் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் அத்தியவசியம் இல்லாத 300 பொருட்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இலங்கை அதிபர் விக்கிரமசிங்க நாட்டு மக்கள் வீண் செலவுகளை தவிர்த்து பொருட்களை சேமிக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே தான் மக்கள் பொருட்களை சேமித்து வைக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.ஏனென்றால் எதிர்வரும் ஓராண்டு காலம் இலங்கைக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும் எனவும் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை தற்போது தான் கொஞ்சமாக சிறிதளவேணும் அதிலிருந்து வெளிவர தொடங்கி இருக்கிறது .
ஆகவே இனிவரும் காலங்கள் மக்களுக்கு மிகவும் ஒரு சவாலான விஷயங்களுக்கு முகம் கொடுக்கும் காலமாகவே அமையும் என அந்நாட்டு அதிபர் கூறி இருக்கிறார். ஆகவே மக்கள் உணர்ந்து வீண் செலவுகளை தவிர்த்து , இருப்பவற்றை கொண்டு இனிவரும் இரண்டு வருடங்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையே அவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் அடிப்படையில் தான் பல்வேறு வகையான இறக்குமதி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த இரண்டு வருட காலத்திலும் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. மக்களுக்கு தேவையான, பாவனையில் இருந்த 300 வகையான இறக்குமதி பொருட்கள் தடை செய்யப்படும் பட்சத்தில் உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அது காட்டுகிறது. அடுத்தது நெல் , காய்கறி ,தானிய வகை மற்றும் ஏனைய விவசாயத் துறைகளை இரண்டு வருடத்தில் அரசு அபிவிருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆகவே இலங்கை அதிபர் கூறியது போல நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் வரை ,வரும் சவாலான இரண்டு வருட காலத்திற்கு முகம் கொடுக்க உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதும் உண்மை.
மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 300 பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சுட்டி காட்டியுள்ளார்.
முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் நாடு இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுத்து சிக்கித் தவித்தபோது, மக்களின் பசியையாவது போக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாக இலங்கை அதிபர் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு அதிபர் தெரிவில் போட்டியிட்டதாக கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் அதிபராகத் தெரிவாகினேன். இருந்த போதிலும், மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில் தான் இந்த அதி உயர் பதவியில் நான் இருக்கின்றேன் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மக்கள் வீண் செலவுகளை தவிர்க்கும் பட்சத்தில் வரும் காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க தான் இந்த பதவிக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் தேசிய அளவிலான ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அனைத்து கட்சிகளின் கலந்தாய்வு, அவர்களின் தீர்மானங்களுடன் இந்த அரசியல் பயணம் தொடரும் என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், வீண் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை சேமித்து வைக்குமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.