இலங்கை வரலாற்றில் முதல்முறை.. இரண்டாவது சுற்றுக்கு சென்ற அதிபர் தேர்தல்.. வெற்றியாளர் யார்?
இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமார திசநாயக்காவுக்கு 42.31 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரமதாசாவுக்கு 32.76 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அனுரா குமார திசநாயக்காவுக்கு 42.31 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகவும் அமைதியாக முறையில் நிறைவு பெற்றது. களத்தில் 38 பேர் வேட்பாளர்களாக இருந்தாலும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதாச, தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைவர் அனுரா குமார திசநாயக்க ஆகியோரே முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்பட்டனர்.
வெற்றியாளர் யார்?
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வெளியான முடிவுகளின்படி, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அனுரா குமார திசநாயக்காவுக்கு 42.31 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரமதாசாவுக்கு 32.76 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.
இலங்கை தேர்தல் முறைப்படி, 50 சதவிகித வாக்குகள் யாருக்கு கிடைக்கிறதோ அவரே வெற்றியாளர் ஆவார். யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத காரணத்தால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Official : Sri Lanka Presidential Election 1st round final vote
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) September 22, 2024
Anura Kumara 5634915 (42.31)
Sajith Premadasa 4363035 (32.76) pic.twitter.com/CAQIdh9iQZ
இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு இடத்தில் உள்ள வேட்பாளர்களின் வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில், யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார்.
முன்னிலை வகிக்கும் திசநாயக்க யார்?
55 வயதான திசநாயக்க தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிமீ தொலைவில் அமைந்துள்ள, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர், தனது கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார். அதன்படி, 1987 மற்றும் 1989 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜே.வி.பி.யின் அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தின் போது கல்லூரி அரசியலில் திசநாயகே இணைந்தார். சிலர் இதனை இலங்கையின் ரத்தம் தோய்ந்த காலகட்டம் என்பார்கள். பரவலான கொலைகள் மற்றும் அரசியல் படுகொலைகள் அப்போது வழக்கமாக இருந்தது. ஜே.வி.பி நிறுவனர் ரோஹன விஜேவீர உட்பட குறைந்தது 60,000 பேர் கொல்லப்பட்டதைக் கண்ட கிளர்ச்சியை அரசு கொடூரமாக நசுக்கியது.