Space News | பலூன் மூலம் விண்வெளிக்குப் பறக்கும் சமோசா, சிக்கன் நக்கட்ஸ்..! என்ன திட்டம் பிரிட்டீஷ் பொறியாளர்களுக்கு?
இங்கிலாந்தில் விண்வெளிக்கு சமோசா, சிக்கன் நக்கட்ஸ், பர்கர் உள்ளிட்ட பொருட்கள் பலூன் மூலம் அனுப்பப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் கிறிஸ் மற்றும் அலெக்ஸ். அந்த நாட்டில் உள்ள உள்ள ஷெப்பீல்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள். அடிப்படையில் மெக்கானிக்கல் பொறியாளர்களான இவர்கள் இருவரும் வானிலை பலூன் எனப்படும் வெதர் பலூனை வளிமண்டலத்திற்கு வெளியே அனுப்பி அதை வீடியோவாக யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
மற்ற பலூன்களை போல குறைந்த தூரத்திற்கு இந்த பலூன் பறக்காமல் வளிமண்டலத்திற்கு வெளியேயும் இந்த பலூன் பறந்து செல்கிறது. இந்த பலூனில் இவர்கள் ஜி.பி.எஸ். கண்காணிப்பு கருவி, சாட்டிலைட் டிராக்கர், கேமரா ஆகியவற்றையும் பொருத்தியுள்ளனர். இதன்மூலம் பலூன் வானத்தில் எவ்வளவு உயரம் பறக்கிறது என்பதை கண்டறிய முடிகிறது. இவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் வான்வெளியில் இருந்து பூமி அமைந்துள்ள விதம் பார்ப்பவர்களை வெகுவாக ஈர்க்கும் வகையில் அமைந்து வருகிறது. மேலும், வான்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களும் காண்போரை மிகவும் ஈர்க்கிறது.
இவர்களின் முயற்சியால் கவரப்பட்ட பல முன்னணி நிறுவனங்களும் தங்களது பொருட்களை இந்த முறையில் அறிமுகப்படுத்த ஆர்வம்காட்டினர். இதனால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவர்கள் இருவரும் “சென்ட் இன்டூ ஸ்பேஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தை தொடங்கியது முதல் இவர்கள் இருவரும் வான்வெளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அவற்றில் சாக்லேட்கள், வெள்ளி நாணயங்கள், சிக்கன் நக்கட்ஸ், பார்பி டால்ஸ் உள்ளிட்ட பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இந்த முறையை பயன்படுத்தி சமோசா, தக்காளி, விதைகள் உள்ளிட்ட பலவற்றையும் வான்வெளிக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்களது இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக உள்ளது.
இவர்கள் இருவரும் வான்வெளிக்கு செலுத்தும் பலூனில் ஹீலியம் காற்று நிரப்பப்பட்டு இருக்கும். இந்த பலூன் தன்னால் வானத்தில் எந்தளவு உயரத்திற்கு செல்ல முடியுமோ அந்தளவு உயரத்திற்கு செல்லும். அந்த பலூனால் செல்ல முடிந்த அதிகபட்ச உயரத்திற்கு சென்ற பிறகு, பலூன் வெடித்துவிடும். பின்னர், பலூனில் பொருத்தப்பட்டிருந்த கேமரா, ஜி.பி.எஸ். கருவி. உள்ளிட்டவை கீழே விழுந்துவிடும். ஜி.பி.எஸ். டிராக்கர் உதவியுடன் அலெக்சும், கிறிஸ்சும் பலூன் வெடித்து விழுந்த இடத்திற்குச் சென்று கேமரா, ஜி.பி.எஸ்.டிராக்கர் உள்ளிட்டவற்றை மீட்கின்றனர். இவர்கள் தங்களது இந்த செயலை வீடியோவாக பதிவு செய்து யூ டியூப்பிலும் பதிவு செய்து வருவதால், அந்த யூ டியூப் சேனலுக்கு ஏராளமான பார்வையாளர்கள் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் முதன்முதலில் இங்கிலாந்தின் ஆஷ்போர்னில் இருந்து அனுப்பிய பலூன் விண்வெளிக்கு சென்று வெடித்துச்சிதறிய பிறகு 170 கி.மீ. தொலைவிற்கு அப்பால் உள்ள இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.