Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்தின் பிரதமராக நாடு திரும்புவார் என, அவரது அவாமி லீக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sheikh Hasina: ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு கொடுத்ததற்கு அவாமி லீக் கட்சி சார்பில் இந்தியாவிற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசினா:
வங்கதேசத்தில் பொதுமக்களிடையே வெடித்த வன்முறை காரணமாக, ஷேக் ஹசீனா தனது இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைதொடர்ந்து அங்கு தற்போது இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த அரசின் கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக வங்கதேசத்திற்கு திரும்புவார் என, அவரது தலைமையிலான அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரான ரபி அலாம் தெரிவித்துள்ளார். அதோடு, தங்கள் முன்னாள் பிரதமருக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்ததற்கு இந்தியாவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
”வங்கதேசத்திற்கு உதவி அவசியம்”
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய ரபி அலாம், “இளம் தலைமுறை தவறு செய்துள்ளது, ஆனால் அது அவர்களின் தவறு அல்ல, அவர்கள் கையாளப்பட்டுள்ளனர். வங்கதேசம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, அதை சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். ஒரு அரசியல் எழுச்சி என்பது நல்லது தான். ஆனால் வங்கதேசத்தில் நடந்து கொண்டிருப்பது அதுவல்ல. இது ஒரு பயங்கரவாத எழுச்சி. எங்கள் தலைவர்கள் பலர் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடைக்கலம் வழங்கியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பான பயணப் பாதையை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி கூறுகிறேன். இந்திய மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
புதிய அரசின் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சிவில் சர்வீஸ் பணியமர்த்தல் விதிகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. பாதுகாப்பற்ற சூழல் உருவானதை அடுத்து ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரானார். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களைக் கடத்தவும், சித்திரவதை செய்யவும், கொல்லவும் பாதுகாப்புப் படையினரையும் காவல்துறையையும் பயன்படுத்தியதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஷேக் ஹசீனா, அரசியல் உள்நோக்கத்துடன் தன்மீது குற்றம்சாட்டப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்.





















