(Source: ECI/ABP News/ABP Majha)
சுதந்திரம் கோரும் ஸ்காட்லாந்து...பிரிட்டன் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
யுனைடெட் கிங்டம் நாடாளுமன்றத்திலிருந்து அனுமதி பெறாமல் சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் கிங்டம் என்பது வடமேற்கு ஐரோப்பியாவில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளை ஒருங்கிணைத்த இறையாண்மை கொண்ட பகுதியாகும். அதில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் யுனைடெட் கிங்டம் உருவானது. அதிலும், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது பிரிட்டன் என அழைக்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த 1920களில் இருந்து பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற ஸ்காட்லாந்து முயற்சித்து வருகிறது. ஸ்காட்லாந்து சுதந்திர இயக்கத்தின் அரசியல் வடிவமாக தற்போது ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சி உருவெடுத்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த அப்போதைய கன்சர்வேட்டிவ் கட்சி தலைமையிலான அரசாங்கம் அனுமதி அளித்தது. அதன் பேரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டன் ஒன்றியத்தில் தொடரவே 55 சதவிகித மக்கள் வாக்களித்தனர்.
இச்சூழலில், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 19ஆம் தேதி, இரண்டாம் பொது வாக்கெடுப்பை நடத்த ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சரும் ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான நிக்கோலா ஸ்டர்ஜன் திட்டமிட்டார். இது தொடர்பான வழக்கில், யுனைடெட் கிங்டம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்காட்டிஷ் தேசியவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் அந்த தீர்ப்பில், யுனைடெட் கிங்டம் நாடாளுமன்றத்திலிருந்து அனுமதி பெறாமல் சுதந்திரம் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறியுள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், "யுனைடெட் கிங்டமின் அடுத்த பொது தேர்தலின் முக்கிய விவகாரமாக ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சிக்கு ஸ்காட்லாந்தின் சுதந்திரமே இருக்கும்" என்றார்.
நிக்கோலாவின் வேண்டுகோளின் பேரில்தான், ஸ்காட்லாந்தின் உயர்மட்ட சட்ட நிபுணர், வழக்கறிஞர் டோரதி பெயின், ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கு அத்தகைய வாக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளதா? எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட் ரீட், "அதிகார பகிர்வின் ஒரு அங்கமாக கடந்த 1999ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி தனி ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அதன்படி, பொதுவாக்கெடுப்பை கோரும் அதிகாரம் யுனைடெட் கிங்டமிடமே உள்ளது.
நீதிமன்றம் அதன் தீர்ப்பில் ஒருமனதாக இருந்ததாலும் குறிப்பிட்ட விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாலும் எதிர்பார்த்ததை விட விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டது" என்றார்.
தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறியுள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், "நாளுக்கு நாள் தெளிவாகிறது. சுதந்திரத்தை அடைவது தற்போது விரும்பத்தக்கது மட்டும் அல்ல.
WATCH: #BNNUK Reports.
— Gurbaksh Singh Chahal (@gchahal) November 24, 2022
Nicola Sturgeon @NicolaSturgeon, First Minister of Scotland, tells a crowd of independence supporters in Edinburgh that the fight for independence from the United Kingdom is not over. #UK #Scotland #Politics pic.twitter.com/OeckxBsqpb
பிரெக்சிட் பேரழிவு, நாம் வாக்களிக்காத அரசாங்கங்களால் திணிக்கப்படும் கொள்கைகளினால் ஏற்படும் சேதம் மற்றும் குறைந்த வளர்ச்சியில் இருந்து தப்பிக்க வேண்டியது அவசியம். சமத்துவமின்மை பொருளாதார மாதிரி நம்மைத் தடுத்து நிறுத்துகிறது" என்றார்