Marriage Bill : இது வரலாறு.. 'லவ் இஸ் லவ்'...அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட தன்பாலின திருமண மசோதா..
தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.
சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். எந்த ஒரு காரணமும் இன்றி ஒருவர் மீது ஏற்படும் உணர்வு. அதனால் தான், அனைத்தையும் கடந்து ஒருவரை நேசிக்கிறோம். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதுன் ஒரு இயல்பான நிகழ்வே.
ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.
சட்ட அங்கீகாரம் பெற்ற நாடுகள்:
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தன்பாலின திருமணத்தை பாதுகாக்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதா அமெரிக்காவின் செனட் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது போல தன்பாலின திருமணத்தையும் பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு முன்பாக அதை பாதுகாக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக கட்சியினரும் குடியரசு கட்சியினரில் சிலரும் ஒன்று சேர்ந்து சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 61 பேர் வாக்களித்த நிலையில், 36 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் பைடன் கூறுகையில், "இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் திருமணத்திற்கான மரியாதை சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஒரு அடிப்படை உண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் விளிம்பில் உள்ளது. காதல் என்றால் காதல்தான். அமெரிக்கர்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்" என்றார்.
செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் அது மீண்டும் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும். அங்கு, நிறைவேற்றப்பட்டவுடன், அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.
பல பத்தாண்டுகளாக, தன்பாலின திருமண விவகாரம் இரு கட்சியினருக்கிடையே பெரும் பிரச்னையை கிளப்பி வந்த நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த 11 பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவில், தன்பாலின திருமணங்கள் 2015 முதல் உச்ச நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கருக்கலைப்பு உரிமையை நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அதே உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்த பிறகு, பல முற்போக்குவாதிகள் ஒரே பாலின திருமணமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்று அஞ்சினர்.
இச்சூழலில், அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.