"பிளவை ஏற்படுத்த முயற்சி.. ஆனால், பிரதமர் மோடி விவேகமுள்ள தலைவர்" ரஷிய அதிபர் புதின் புகழாரம்
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது.
இந்திய, ரஷிய நாடுகளுக்கிடையே பல காலமாக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி மோடி காலம் வரையில், இந்தியாவின் நட்பு நாடாக ரஷியா இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவுடனான உறவு அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டபோதிலும், ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறோம்.
நட்பு பாராட்டி வரும் இந்திய, ரஷிய நாடுகள்:
குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா எடுத்த நிலைபாடு இரு நாட்டு உறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. உக்ரைனுக்கு எதிராக படையெடுத்த ரஷியாவை கண்டிக்கும் விதமாக ஐநா அரங்கில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியிலும் ரஷியாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்காமல் இந்தியா நடுநிலை வகித்தது.
அதேபோல, ரஷியாவுக்கு எதிராக மேற்குவலக நாடுகள் பல விதமான பொருளாதார தடை விதித்தபோதிலும், ரஷியாவுடன் இந்தியா தொடர் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க மேற்குலக நாடுகளும் அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் பலன் அளிக்கவில்லை.
ரஷியாவுடன் சுமூகமான உறவை பேணி வரும் இந்தியா தலைமை பற்றி ரஷிய அதிபர் புதின் பல முறை பாராட்டி பேசியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, தற்போது புதின் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சி"
ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதின், "இந்திய அரசாங்கம் தனது குடிமக்களின் நலன்களுக்காக சுதந்திரமாகச் செயல்படுகிறது. இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றது.
மேற்குலகம் தங்களின் ஏகபோகத்திற்கு உடன்படாத ஒவ்வொருவருக்கும் எதிரியை உருவாக்க முயல்கிறது. அனைவரும் இப்படிப்பட்ட ஆபத்தில் உள்ளனர். இந்தியாவும் கூட. ஆனால் இந்தியத் தலைமை தனது தேசத்தின் நலன்களுக்காக சுதந்திரமாக செயல்படுகிறது. ரஷியாவிலிருந்து இந்தியாவை பிரிக்கும் முயற்சிகள் அர்த்தமற்றவை. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என்றார்.
இந்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ள புதின், "அவரது தலைமையில் இந்தியா மேலும் வலுவடைந்து வருகிறது. இந்தியாவில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அது ஒரு சக்திவாய்ந்த நாடு. வலிமைமிக்க நாடு. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அது வலுவாக வளர்ந்து வருகிறது. ரஷியாவைப் போலவே இந்தியாவிற்கும் எல்லைகள் இல்லை. ஏனெனில், இந்தியர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் தங்கள் அடையாளத்தை உருவாக்குகிறார்கள்" என்றார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்காததற்கு காரணம் கூறிய புதின், "ஒரு நிகழ்வின் போது நம் நண்பர்களுக்கு நான் ஏன் சில பிரச்சனைகளை உருவாக்க வேண்டும்?" என விளக்கம் அளித்தார்.